ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. ரயிலில் ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு “டார்க் த்ரில்லர்’ ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “இவ்வளவு நேரம் பொறுமையாகக் காத்திருந்து, எங்களையும் இந்தத் திரைப்படத்தையும் வாழ்த்திய அனைத்து ரசிகர்களுக்கும், தூரத்திலிருந்து வந்திருந்த மக்களுக்கும் நன்றி.

இயக்குநர் மிஷ்கின் நான் சம்பாதித்த அன்பைவிடவும் அதிகம் சம்பாதித்திருக்கிறார். நான் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இவர் படத்துக்கு ஆடிஷன்களுக்குச் சென்றிருக்கிறேன். ஹீரோவான பிறகு இவர் ஒருமுறை என்னை ஒரு படத்துக்கு அழைத்தார். `இவரைப் பார்த்தால் சைக்கோ மாதிரி இருக்கும், எதற்கு வம்பு’ என்று பயந்து, நேராகச் சென்று ‘டேட் இல்லை’ என்று சொல்லி மறுத்துவிட்டேன். ஆனால், பின்னர் வெளியான ‘சைக்கோ’ படம் பார்த்துக் கவர்ந்தவுடன், அவரை தொலைபேசியில் அழைத்து பேசினேன். மிஷ்கினை நேரில் சந்தித்து சுமார் 8 மணி நேரம் பேசி அந்தப் படம் குறித்து பேசினோம். அப்போதுதான் ஒரு கைக்கடிகாரத்தையும் அன்பளிப்பாக கொடுத்தார்.