சென்னை மாநகரின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான துறைமுகத்தில், இந்த முறை தேர்தல் களம் அனல் பறக்கிறது. குறிப்பாக, திமுகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான பி.கே. சேகர்பாபு மற்றும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் ஆகியோருக்கு இடையே நிலவும் அரசியல் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சேகர் பாபுவை எதிர்த்து தவெக சார்பில் சினோரா அசோக் என்பவர் போட்டியிட்டிருந்தார்.
பிரசாரத்தின் போதே இருதரப்புக்கும் இடையே வார்த்தை மோதல்கள் கடுமையாக நடந்திருந்தது. சேகர் பாபு தன்னுடைய குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுப்பதாக சினோரா அசோக் பிரசாரத்திலேயே குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக மாலை 5:20 மணியளவில் சேகர் பாபுவும் சினோரா அசோக்கும் தங்களது ஆதரவாளர்களோடு நேருக்கு நேராக மோதிக் கொண்டனர். காவல்துறையினரும் துணை ராணுவப்படையினரும் வந்தே இருதரப்பையும் விலக்கி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து சென்னை தொகுதிகளில் துறைமுகம் கூர்ந்து கவனிக்கும் தொகுதியாக மாறியது. எனவே, “அமைச்சர் vs புதிய முகம்” என்ற ரீதியில் இந்த மோதல் ஒரு தனிப்பட்ட சவாலாகவே பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே சினோரா அசோக், அமைச்சருக்குப் பலத்த அதிர்ச்சி அளித்து முன்னிலை பெற்றுள்ளார். காலை 10:45 மணி நிலவரப்படி, சினோரா அசோக் 4,544 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 3,933 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், திமுக-வின் சேகர்பாபு 3,839 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும், நாம் தமிழர் கட்சியின் பௌஜான் ஷரீப் 281 வாக்குகள் பெற்று 4-ம் இடத்திலும் இருக்கின்றனர். அமைச்சரை விட சுமார் 705 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் முன்னிலை வகிப்பது அரசியல் வட்டாரத்தை உற்று நோக்க வைத்துள்ளது.