தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்ட நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் அக்கட்சியின் வேட்புமனு குளறுபடி காரணமாக தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்தத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட பிரேம் குமார் என்பவருக்கு த.வெ.க ஆதரவு வழங்கியது. வாக்குப்பதிவுக்கு மூன்று நாள்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட ஆதரவு என்றாலும் கணிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான வாக்குகளைப் பெற்று கவனத்தை ஈர்த்திருக்கிறார் தொலைக்காட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் பிரேம் குமார்.
இந்தத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்கிற எடப்பாடி பழனிசாமியின் இலக்கிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது சுயேச்சை வேட்பாளர் பெற்ற வாக்குகள்.
விசில் சின்னத்தில் நேரடியாக வேட்பாளர் நின்றிருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு இன்னும் நெருக்கடியாக இருந்திருக்கும் என்கிறார்கள் அக்கட்சியின் நிர்வாகிகள்.

இது குறித்து தெரிவித்த எடப்பாடி தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், “கடந்த தேர்தலில் 93 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் மதியம் 2 மணி நிலவரப்படி தி.மு.க – வைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தில் இருக்கிறார் சுயேச்சை வேட்பாளர் பிரேம் குமார்.
எடப்பாடி பழனிசாமி 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். முதல்வர் ஸ்டாலினைப் பார்க்கும் போது விஜய் அலையில் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலை தப்பித்தது நிம்மதி அளிக்கிறது” என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.