தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் VB-GRAM (G) Scheme 2025 திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புதிய நடைமுறைகளை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் வட்டார அதிகாரிகளுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் விரிவான வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளார்.
புதிய வழிகாட்டுதலின்படி, உடல் உழைப்பை மேற்கொள்ளும் திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் முட்புதர்கள் அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், மண்மூடுதல், நீர்பாய்ச்சுதல், மண்வரப்பு அமைத்தல், கல்வரப்பு அமைத்தல் மற்றும் அகழி அமைத்தல் (Trench Cutting) உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணித்தளத்தில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அவர்களுக்கு இந்த சிறப்புப் பணிகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில், மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் மட்டுமே மண் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தலாம். அப்போது அவர்கள் 5 அல்லது 10 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, சாதாரண தொழிலாளர்கள் மேற்கொள்ளும் பணியின் 50 சதவீத அளவு மட்டுமே முன்கூட்டியே அளவீடு செய்து ஒதுக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.