Vijay : 'அமைதியாக வீசிய அலை' தவெகவின் வெற்றிக்கு காரணமாக அமைந்த அந்த 3 விஷயங்கள்!'

Spread the love

சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் இருபெரும் திராவிட கட்சிகளை விஞ்சிய வெற்றியைப் பெற்று தவெக சாதித்திருக்கிறது. விஜய் இந்த வெற்றியைப் பெற காரணமாக அமைந்த விஷயங்கள் என்னென்ன?

TVK Vijay
TVK Vijay

கட்சி ஆரம்பித்த நாளிலிருந்தே தனக்கும் தன் கட்சிக்கும் எதிரி திமுக மட்டுமே என்பதில் விஜய் தெளிவாக இருந்தார். அதற்கேற்ற வகையில்தான் அவருக்கு வியூகங்களும் வகுத்து கொடுக்கப்பட்டது. எந்த மேடையில் விஜய் பேசினாலும் திமுகவை மட்டுமே விமர்சிப்பார். ஸ்டாலினை மட்டுமே பெயர் குறிப்பிட்டு தன்னுடைய எதிரியாக முன் நிறுத்தினார். இடையில் சீமானும் அவரது ஆதரவாளர்களும் விஜய்யை கடுமையாக விமர்சித்தனர். அது தவெக தொண்டர்களை உஷ்ணப்படுத்தியது.

விஜய் சீமானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என விரும்பினர். ஆனால், விஜய்யின் வியூக தரப்பு விஜய்யை திமுகவுக்கு எதிராக பொசிஷன் செய்வதில் கூர்மையாக செயல்பட்டனர். சீமானுக்கு விஜய் பதில் சொன்னால் சண்டை சீமான் vs விஜய் என மாறிவிடும் என்பதால் அதை முழுமையாக தவிர்த்தனர். அதேநேரத்தில் திமுகவிலிருந்து விஜய் மீது சிறுவிமர்சனம் வந்தாலும் விஜய்யே நேரடியாக பதில் சொல்வார். உதாரணமாக கடந்த ஆண்டு திமுகவின் இளைஞரணி நடத்திய புத்தகத் திருவிழாவில் உதயநிதி தவெகவை பொருட்காட்சி அட்டைகளோடு ஒப்பிட்டு விமர்சித்திருந்தார்.

த.வெ.க - விஜய்
TVK – Vijay

விஜய் உடனடியாக அதை எதிர்த்து ட்வீட் செய்திருந்தார். அதேமாதிரி, கூட்டணி விவகாரத்திலும் சில குழப்பங்கள் இருந்தாலும் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்கிற ஸ்டாண்டில் உறுதியாக நின்றுவிட்டனர். இந்த விவகாரத்தில் அதிமுகவே விஜய்யின் வியூகத்துக்கு முன்பு தடுமாறியது. கரூர் விவகாரத்துக்கு பிறகு விஜய் தங்களுடன் கூட்டணிக்கு வருவார் என எடப்பாடி பழனிசாமி தப்புக் கணக்கு போட்டார். தன்னுடைய பிரசாரங்களில் தவெகவுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.

விஜய் அப்போதும் இறங்கி வரவில்லை. கரூர் சம்பவம் குறித்து 2 மாதங்கள் கழித்துதான் விஜய் வெளியிலேயே வந்தார். அப்போது நடத்திய சிறப்புப் பொதுக்குழுவில் தவெக தலைமையில்தான் கூட்டணி, விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றி அதிமுகவின் ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இதன்மூலம் தங்களுக்கான டிமாண்டையும் களத்தில் தங்களின் மதிப்பையும் தவெக உயர்த்திக் கொண்டது. திமுகவை எதிர்க்கக்கூடிய வல்லமை தங்களுக்கு மட்டுமே உண்டு. அதிமுக திமுகவை எதிர்க்க வேண்டுமானாலும் தங்களின் துணையுடனேயே செய்ய முடியும் என்கிற கதையாடலை உருவாக்கினர். இந்த தெளிவான பொசிஷனிங்தான் தவெகவை அரசியல் களத்தில் முதன்மை சக்தியாக மாற்றியது.

Vijay
Vijay

விஜய்யின் உச்சநட்சத்திரம் என்கிற அந்தஸ்தும் அவர் மீதான ஈர்ப்பும்தான் அவருக்கான அரசியல் கரு பொருள். சாமானிய அரசியல்வாதிகளை போல விஜய் தெருவில் இறங்கி மக்களிடம் நெருங்கியிருந்தால் அவரின் நட்சத்திரத்தன்மை ஈர்ப்பை இழந்திருக்கும். ஆனால், விஜய்யின் வியூக வகுப்பாளர்கள் அதை நடக்கவிடவில்லை. விஜய்யை அரசியலிலும் உச்ச நட்சத்திரமாகவே உயர்த்திப் பிடித்தனர்.

விஜய் எல்லா பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கமாட்டார். தினசரி மக்களை சந்திக்கமாட்டார். பத்திரிகையாளர்களை சந்திக்கமாட்டார். அவர் அவரின் உயரத்தில் அப்படியே இருப்பார். அவருக்கு தோதுவான நேரத்தில் மக்களுக்கு காட்சி கொடுப்பார்.

மக்கள் அவரை தெய்வமாக பார்ப்பார்கள். அதனால்தான் கரூர் சம்பவத்தில் விஜய் தார்மீக பொறுப்பை ஏற்காவிடிலும், மக்கள் பெரும்பாலும் விஜய்க்கு ஆதரவாகவே இருந்தனர். வேறெந்த அரசியல்வாதியாக இருந்தாலும் அப்படியொரு சம்பவத்துக்கு பிறகு அவரின் எதிர்காலம் என்னவாகியிருக்கும் என்றே தெரியவில்லை. ஆனால், விஜய்க்கு அப்படி எதுவுமே நடக்கவில்லை. உயிரிழப்பை சந்தித்த குடும்பங்கள் கூட விஜய்க்கு எதிராக பெரிதாக பேசவில்லை. இப்படியான மாபெரும் ஈர்ப்புதான் விஜய்க்கு தேர்தலிலும் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. இந்த பாணி ஆரோக்கியமானதா இல்லையா என்பதெல்லாம் தனி வாதம். ஆனால், இதுதான் விஜய்யின் சக்சஸ் பார்முலா.

Vijay
Vijay

காங்கிரஸின் கையிலிருந்து அரைநூற்றாண்டுக்கு முன்பு திமுக அதிகாரத்தை பறித்தது. திமுகவிலிருந்து பிரிந்து வந்து அதிமுகவை தொடங்கி இருமுனை அரசியலை கூர்ப்படுத்தினார் எம்.ஜி.ஆர். இந்த இருபெரும் கட்சிகளும் அரைநூற்றாண்டுகளுக்கு தமிழகத்தை ஆண்டுவிட்டது. சமூகநீதி சார்ந்தும் கல்வி சார்ந்தும் இந்த இரு கட்சிகளும் தமிழகத்துக்கு செய்தவை ஏராளம். ஆனால், அந்த கட்சிகள் காலப்போக்கில் அடைந்த தேய்மானமும் அவர்களின் நவீன வடிவமும் மக்களுக்கு உவப்பானதாக இல்லை. ஊழல், கொள்ளை, குடும்ப அரசியல் என எக்கச்சக்க விஷயங்கள் மக்களை உஷ்ணப்படுத்தின. சாமானியர்களின் மனதில் ஒரு பொருமல் உருவாகி மாற்றத்துக்காக காத்திருந்தனர். அதற்கான வடிகாலாக விஜய் மாறி நின்றார்.

Vijay
Vijay

‘நீங்க ரெண்டு பேர் மட்டுமேதான் கொள்ளை அடிக்கணுமா. மூணாவதா ஒருத்தர் வந்தா உங்களுக்கு என்ன பிரச்னை’ என மக்கள் விஜய்க்காக அறத்தை மீறி கேள்வி கேட்டதெல்லாம் இரு கட்சிகளின் மீதான அதிருப்தியினால் மட்டுமே.

முடிவுகளைப் பார்க்கையில் பத்திரிகையாளர்கள், கருத்துக் கணிப்பாளர்கள், அரசியலர்கள் என அனைத்து தரப்பினரும் மக்களின் எண்ணவோட்டத்தை அறிவதில் கோட்டை விட்டிருக்கின்றனர். மக்கள் மத்தியில் விஜய்க்கு சாதகமாக ஒரு அமைதி அலை வீசியிருப்பதையே முடிவுகள் காட்டுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *