கிரிக்கெட் போட்டியில் இப்படியொரு கேட்ச்சை பார்த்தால், ஒரு நிமிடம் நம்மாலேயே நம்ப முடியாது. ஓடிவரும் வீராங்கனை… திடீரென தலைகீழாகச் அந்தர்பல்டி (backflip ) அடித்து கேட்ச் பிடிக்கிறார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் எடுத்த கேட்ச் என்ற தகவலுடன் வீடியோ பலராலும் பகிரப்பட்டது. அதிலும், சிலர் இந்த அசாத்திய கேட்ச்சை ஹர்மன்ப்ரீத் கவுர் பிடித்ததாகக் குறிப்பிட்டனர்.
ஆனால், இங்கு தான் ட்விஸ்ட்!!
இந்தக் காட்சி உண்மையான கிரிக்கெட் போட்டியில் நடந்தது அல்ல. AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோ இது.
“ஒரு வீடியோவை உருவாக்கிவிட்டால் என்ன பெரிய பாதிப்பு வந்துவிடும்?” என்று நாம் சாதாரணமாகக் கடந்து செல்லலாம். ஆனால், இந்த ஒரு வீடியோவே AI தொழில்நுட்பம் எவ்வளவு நிஜமாகத் தோன்றும் காட்சிகளை உருவாக்க முடியும் என்பதைப் புரிய வைக்கிறது.
இப்போது ஒரு நபர் உண்மையில் செய்யாத விஷயத்தை, அவர் செய்தது போல ஒரு வீடியோவில் காட்ட முடியும். முகம், குரல் உள்ளிட்டவற்றைத் தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றி, நடக்காத சம்பவத்தைக்கூட நடந்ததாக நம்ப வைக்க முடியும். இப்படியான போலி வீடியோக்கள்தான் ‘Deepfake’ என்று அழைக்கப்படுகின்றன.