அதிகளவில் Chewing Gum சுவைத்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்? – Kumudam

Spread the love

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ‘சுகர்-ஃப்ரீ’ (Sugar-Free) சூயிங்கம் (Chewing gum) மற்றும் பற்பசைகளில் (Tooth paste) இனிப்பிற்காகப் பயன்படுத்தப்படும் ‘சைலிடால்’ (Xylitol) எனும் வேதிப்பொருள் குறித்து, ஐரோப்பிய இதயவியல் சங்கம் நடத்திய சமீபத்திய ஆய்வில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் இந்த சைலிடால், குறைந்த கலோரி கொண்ட ஒரு ‘சர்க்கரை ஆல்கஹால்’ ஆகும். இது இரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக உயர்த்தாது. முக்கியமாக, பல் சொத்தையைத் தடுக்கும் குணம் கொண்டதால், சர்க்கரை இல்லாத சூயிங்கம்கள், மிட்டாய்கள் மற்றும் பற்பசைகளில் இது பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (FSSAI) அனுமதியோடு இது பயன்பாட்டில் உள்ளது.

ஐரோப்பாவைச் சேர்ந்த 17,710 பேரிடம் நடத்தப்பட்ட நீண்டகால ஆய்வில், இரத்தத்தில் சைலிடால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவில் 6 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் 57 சதவீதமும், ஐரோப்பாவில் 30 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் 18 சதவீதமும் இதயம் தொடர்பான பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது. சைலிடால் ரத்தக் கட்டிகளை (Thrombosis) உருவாக்கும் வாய்ப்பை அதிகரிப்பதே இதற்கு முதன்மை காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும், இந்த ஆய்வு ‘அவதானிப்பு சார்ந்த’ (Observational) முறைப்படி மட்டுமே நடத்தப்பட்டதால், சைலிடால் தான் நேரடியாக மாறடைப்பை ஏற்படுத்துகிறது என்று முழுமையாக உறுதிப்படுத்த முடியாது என மருத்துவ வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் உடனடியாகப் பயப்படத் தேவையில்லை என்றாலும், ‘சர்க்கரை இல்லாதது’ (Sugar-free) என்பதற்காகவே ஒரு பொருளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்றும், இதுகுறித்து மேலும் விரிவான ஆராய்ச்சிகள் தேவை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR-NIN) சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *