“அதிமுக, பாமக… அடுத்தடுத்து உதய்க்காக குவிந்த எதிர்க்கட்சிகள்!” – Kumudam

Spread the love

தஞ்சையில் நேற்று திமுக சார்பில் காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும், விவசாயி கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும் ,மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும் ,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்  முதலமைச்சர் விஜயை தரக்குறைவாகவும்,பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசியதாகவும் கூறி  தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டு 9 பிரிவுகளின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

உதயநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளதுஇதேபோன்று, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் .வெ.மகளிர் அணி நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளதாவது, உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை: ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்! மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தஞ்சாவூர் போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்ணியமற்றதாகும். இது கண்டிக்கத்தக்கது. துணை முதலமைச்சர் பொறுப்பு வகித்த, எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் கண்ணியமான முறையில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலின் அவர்களை இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. நண்பகல் 12.00 மணி வரை அவரை கைது செய்வதைத் தவிர்க்கும்படி உயர்நீதிமன்றமே அறிவுறுத்திய பிறகும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை, அதுவும் நாளை சட்டப்பேரவைக் கூடவுள்ள நிலையில் கைது செய்ய வேண்டிய அவசரம் இல்லை.

தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளில் கூட காட்டப்படாத அவசரத்தை இந்த கைது நடவடிக்கையில் அரசும், காவல்துறையும் காட்டியதன் பின்னணியில் இருப்பது அரசியல் மட்டும் தான். தமிழ்நாட்டில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைத் தீர்ப்பதில் தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர இது போன்ற செயல்களில் அல்ல. இனியாவது ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய முன்வர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் சட்டம் – ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவை தொடர்ந்து தேமுதிக தலைவர் பிரேமலதா விஜய்காந்த்  வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது அடிப்படை ஜனநாயக உரிமையாகும். கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயகத்தின் மாண்பாகும்; கைது நடவடிக்கையே தீர்வாகக் கருதுவது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்றதல்ல. கருத்துக்களை ஒடுக்குவதற்காக காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன.

சுதந்திர இந்தியாவில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் பொதுமக்களிடையே அதிருப்தியையும் ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையையும் உருவாக்கும். ஆளுங்கட்சியினர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்டோர் அரசியல் மேடைகளில் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றனர். அதேபோல் எதிர்க்கட்சியினருக்கும் தங்களது அரசியல் கருத்துகளை ஜனநாயக முறையில் தெரிவிக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை குறைக்கும் வகையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. அண்மையில் ராணிப்பேட்டையில் செய்தியாளர்கள் தவெக நிர்வாகிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆனால், எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்தவுடன் உடனடியாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சட்டத்தின் சமநிலையான அமலாக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது. நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள இந்த முக்கியமான நேரத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது ஜனநாயக உணர்வுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் பொருந்தாத செயலாகும். எனவே, ஜனநாயக மரபுகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதித்து, அரசியல் கருத்து வேறுபாடுகளை கைது நடவடிக்கைகள் மூலம் கையாளும் போக்கை அரசு கைவிட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அவரைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் கைது செய்ததை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ள பதிவில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது திரு. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம்.

தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *