இன்ஸ்பெக்டர் முகமது புகாரி கைது செய்யப்பட்ட பின்னணி குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.
“ கடந்த 2024-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் தனிப்படையில் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி இருந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குன்றத்தூரைச் சேர்ந்த ரௌடி திருவேங்கடத்தை கஸ்டடியில் எடுத்து தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக திருவேங்கடத்தை இன்ஸ்பெக்டர் முகமது புகாரி அழைத்துச் சென்றார். அப்போது நடந்த மோதலில் திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இன்ஸ்பெக்டர் முகமது புகாரி பரங்கிமலை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில்தான் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி தொழிலதிபர் அகில்குமாரிடமும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக விசாரித்திருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டிருக்கும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் பயன்படுத்திய சிம்கார்டு, தொழிலதிபர் அகில்குமாரின் பெயரில் இருந்திருக்கிறது. அதனால், தொழிலதிபர் அகில்குமாரிடம் தனிப்படை போலீஸார் விசாரித்திருக்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அகில்குமாரை சேர்த்துவிடுவோம் என மிரட்டி 35 லட்சம் ரூபாய் வரை தனிப்படை போலீஸார் பறித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து போதை பொருள் வழக்கிலும் அகில்குமாரை சேர்த்துவிடுவோம் என இன்ஸ்பெக்டர் முகமது புகாரி மிரட்டியதாகவும் வழக்கில் பெயரைச் சேர்க்காமலிருக்க 5 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி மீது அகில்குமார் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த இடம் யானைக்கவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் அங்கு வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் முகமது புகாரி, அவருக்கு உடந்தையாக இருந்த சீனிவாசனையும் கைது செய்திருக்கிறோம்”‘ என்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உள்ள நிலையில் அந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் முகமது புகாரி சர்ச்சையில் சிக்கியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.