தமிழகத்தில் 60 ஆண்டுகால திராவிட அரசியலுக்கு முடிவு கட்டி, தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு இனி எதிர்காலத்தில் மீண்டும் ஆட்சிக்கே வர முடியாத அளவில் மிகச் சிறப்பான மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை முதல்வர் ஜோசப் விஜய் நடத்திக் கொண்டிருப்பதை சகித்துக் கொள்ள முடியாத வகையில் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பதிவு அமைந்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
கடந்த காலத்தில் அவர் பள்ளி கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது ஊழலின் ஊற்றுக் கண்ணாக அந்த துறையை மாற்றி எத்தகைய லஞ்ச லாவண்யம் நடைபெற்றது என்பதை சமீபத்தில் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவர் விலாவாரியாக ஊடகத்தின் மூலம் அம்பலப்படுத்தியதற்கு இதுவரை எந்த பதிலும் கூறாத அன்பில் மகேஸ் பொய்யாமொழி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குறிப்பாக, தலித் சமுதாயத்தின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இருக்கிற என்னை குறிவைத்து, இழிவுபடுத்தி பேசுவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மேலும், தங்களது ஐ.டி. விங் மூலம் இழிவான பதிவுகளை வெளியிடுவதன் மூலம் தங்களது தரத்தை தான் அவர்கள் தாழ்த்திக் கொள்கிறார்களே தவிர, எக்காலத்திலும் எங்களை விமர்சனத்தின் மூலம் வெல்ல முடியாது என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன். இனியும் இத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொள்வார்களேயானால், அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.