மும்பை ஜுகு பகுதியில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு கபோல் ஹவுசிங் சொசைட்டியில் 7,802 சதுர அடி பங்களா இருக்கிறது. அந்த பங்களாவின் குறிப்பிட்ட ஒரு பகுதியை ஸ்பா மற்றும் சலூன் அமைக்க அஜய் தேவ்கன் வாடகைக்கு விட முடிவு செய்தார். இதற்காக பங்களாவில் உள்பகுதியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்பா மற்றும் சலூன் அங்கு வந்தால் அது தங்களது பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறி மும்பை மாநகராட்சியில் புகார் செய்தனர்.
ஹவுசிங் சொசைட்டி நிர்வாகமும் இது தொடர்பாக மாநகராட்சியில் புகார் செய்தது. இதையடுத்து கட்டுமானப் பணியை நிறுத்தும்படி மாநகராட்சி நிர்வாகம் அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் நோட்டீஸ் கொடுத்த பிறகும் தொடர்ந்து கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. தேவையான அனுமதியின்றி பங்களாவில் உள் மாற்றங்கள், சுவர்கள் அமைத்தல், ஜன்னல் மாற்றங்கள் மற்றும் பிற கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பாக, மும்பை மாநகராட்சி சட்டத்தின் 354ஏ பிரிவின் கீழ், பணியை உடனடியாக நிறுத்தவும், சரியான ஆவணங்களை சமர்ப்பிக்கவும், செப்டம்பர் 10-ம் தேதி இந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
ஆனால் கட்டுமானப் பணிக்கு தேவையான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக அஜய் தேவ்கன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென இன்று மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களுடன் அஜய் தேவ்கன் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பகுதியை இடித்து தள்ளினர். மாநகராட்சி ஊழியர்கள் சுத்தியலால் உடைத்த காட்சி வைரலாகி இருக்கிறது.
இதற்கிடையில், விமல் எலைச்சி விளம்பரத்தில் நடித்ததற்காக தேவ்கன் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார், மகாராஷ்டிரா உணவு மேம்பாட்டு ஆணையம் (எஃப்.டி.ஏ) நடிகர்கள் ஷாருக் கான் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருடன் அஜய் தேவ்கனுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. “சிங்கம்’ என்று பிரபலமாக அறியப்படும் மகாராஷ்டிர எஃப்.டி.ஏ தலைவர் துக்காராம் முண்டே, இந்த விளம்பரம் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாவிற்கு மாற்றான பொருளாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் தெரிவித்து இருந்தார்.