Gen Z போராட்டம் எதிரொலி…. தர்மேந்திர பிரதான் ராஜினாமா…! – Kumudam

Spread the love

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாட்டில் பெரும் புயலைக் கிளப்பியிருந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேர்வு முறைகேடும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும்

தனது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்துள்ள தர்மேந்திர பிரதான், மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட்-யுஜி (NEET-UG) தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டவுடன், மத்திய அரசு உடனடியாகச் செயல்பட்டு வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், முறைகேடு நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க, அடுத்த ஆண்டிலிருந்து இத்தேர்வை கணினி வழித் தேர்வாக (CBT Mode) நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மறுதேர்வைச் சீராக நடத்த அரசு நடவடிக்கை எடுத்ததாகவும், மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் ஒத்துழைப்போடு ஜூன் 21, 2026 அன்று மறுதேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதன்நாளில் இருந்தே இச்சம்பவத்திற்குத் தான் பொறுப்பேற்றுச் செயல்பட்டதாகவும், எந்தவொரு திறமையான மாணவரின் வாய்ப்பும் பறிபோகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜூலை 16 அன்று வெளியான நீட் தேர்வு முடிவுகள் திருப்திகரமாக அமைந்தபோதிலும், சில பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள் மாணவர்களைத் தவறாக வழிநடத்த முயன்றது தனக்கு மனவேதனையை அளித்ததாக தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கடந்த 10 நாட்களாக நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் தன் மனதைப் பாதித்துள்ளதாகவும், நாட்டின் இளைஞர் சக்தியே இந்தியாவின் உண்மையான பலம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நிலவும் சூழலை தேச விரோத சக்திகள் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கவும், நாட்டின் ஒற்றுமையைப் பேணவும், மாணவர்களின் எதிர்காலம் சட்டப் சிக்கல்களில் சிக்காமல் அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும் தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மாணவர்கள் மற்றும் கல்விச் சீர்திருத்தங்களுக்காகத் தாம் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலுக்கும் ஆதரவிற்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். பதவி விலகினாலும், ஒடிசா மக்கள் மற்றும் நாட்டின் இளைஞர்களின் நலனுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன் எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *