பாஜக–அகாலி தளம், ஆறு வருடங்களுக்கு முன் பிரிந்தவர்கள், இன்று மேடையில் கைகோர்த்து நிற்கிறார்கள். 2022-ல் 117 தொகுதிகளில் இவர்கள் இருவரும் சேர்ந்து வென்றது வெறும் 5 இடங்கள். இது தோல்வியை மறைக்கும் கூட்டணியா, அல்லது புதிய வியூகமா?
இன்னொரு பக்கம், இந்தக் கூட்டணி எல்லோரும் கவனிக்கும் பாஜக–அகாலி கணக்கை மட்டும் நம்பவில்லை. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிக்குப் பயன்படுத்திய, பெரிதாகப் பேசப்படாத ஒரு ரகசிய ஆயுதமும் இருக்கிறது, தலித் வாக்குகள்.
2027 தேர்தலைத் தீர்மானிக்கப்போவது யார்?
ஆறு வருடப் பிரிவுக்குப் பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி
ஆறு வருட அரசியல் பிரிவுக்குப் பிறகு, பஞ்சாபில் ஷிரோமணி அகாலி தளமும் (SAD) பாரதிய ஜனதா கட்சியும் (BJP) மீண்டும் கைகோர்த்துள்ளன. 2027-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்தே இந்தக் கூட்டணி உருவாகியுள்ளது. கடந்த காலத்தில் இணைந்து ஆட்சி நடத்திய இந்த இரு கட்சிகளும், இப்போது மீண்டும் ஒரே அணியாகத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகின்றன. ஆனால் இழந்த அரசியல் செல்வாக்கை மீட்டெடுப்பதே இவர்கள் முன்னுள்ள மிகப்பெரிய சவால்.

2020-ல் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களால் இந்தக் கூட்டணி பிரிந்தது. அதற்கு முன்பே, 2017 சட்டமன்றத் தேர்தலில் இது தோல்வியைச் சந்தித்திருந்தது. பிரிவுக்குப் பிறகு இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. அவற்றின் முடிவுகள் சரிவின் அளவைக் காட்டுகின்றன.
2022 சட்டமன்றத் தேர்தல்: 117 தொகுதிகளில் அகாலி தளம் வென்றது வெறும் 3, பாஜக 2.
2024 மக்களவைத் தேர்தல்: அகாலி தளம் ஒரு தொகுதியில் வென்றது. பாஜக கணக்கையே தொடங்கவில்லை. ஆனால் பாஜக 18% வாக்குகளைப் பெற்றது, இது அகாலி தளத்தை விட அதிகம். வாக்கு வங்கி உயர்ந்தும், அதை வெற்றியாக மாற்ற முடியவில்லை.
இப்போது மாஜா, மால்வா, தோவாபா ஆகிய மூன்று பிராந்தியங்களிலும் இழந்த ஆதரவை மீட்க வேண்டும். வரலாற்று ரீதியாக இது இந்திய அரசியலின் மிக வெற்றிகரமான கூட்டணிகளில் ஒன்று, ஆனால் களம் கணிசமாக மாறிவிட்டது. ஆம் ஆத்மி அரசின் மக்கள் நலத் திட்டங்களை எதிர்கொள்ள இந்தக் கூட்டணி என்ன புதிய திட்டங்களை முன்வைக்கும், மற்ற கட்சிகளிடம் இழந்த வாக்குகளை எப்படி மீட்கும் என்பவை அவர் சுட்டிக்காட்டும் சவால்கள்.
முதல்வர் பகவந்த் மான் இந்த மறு இணைவைக் கேள்வி கேட்டுள்ளார். “இத்தனை ஆண்டுகளாக ஒருவரையொருவர் வெளிப்படையாக விமர்சித்தவர்கள், இப்போது ஒன்று கூடி என்ன செய்யப்போகிறார்கள்?” என்பது அவர் கேள்வி.
2020-ல் வேளாண் சட்டங்களால் அகாலி தளம் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது. அந்தப் பிளவு புதிய கூட்டணிக்கும் அரசியல் சவாலாகவே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிவுக்கு வழிவகுத்த பிரச்சினைகள் தீர்ந்துவிட்டனவா என்று எதிர்க்கட்சிகள் இப்போதே கேட்கத் தொடங்கிவிட்டன.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பர்கத் சிங், “வேளாண் சட்டங்கள் பிரச்சினையில் சுமார் 750 விவசாயிகள் உயிரிழந்தனர். அச்சத்தின் காரணமாகவே அகாலி தளம் கூட்டணியை முறித்தது. அந்தப் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டனவா? இந்தக் கூட்டணி அகாலி தளத்துக்குப் பெரும் பேரழிவாக அமையும்.”
செவ்வாயன்று கூட்டணி அறிவிப்பின்போது இதுபற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன, எனவே அந்தப் பிரச்சினை இனி இல்லை” என்று பதிலளித்தார்.

தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு அதிக இடங்கள், அதிகப் பொறுப்பு
வரலாற்று ரீதியாக 117 தொகுதிகளில் 94-ல் அகாலி தளமும், 23-ல் பாஜகவும் போட்டியிட்டன. ஆனால் பாஜகவின் தேசிய செல்வாக்கும், பஞ்சாபில் உயர்ந்த வாக்கு வங்கியும் சமன்பாட்டை மாற்றியுள்ளன. 2024-ல் 18% வாக்குகள் பெற்றதால், 40-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கோருவதாகக் கூறப்படுகிறது, இது பாரம்பரிய 23-ஐ விடக் கணிசமாக அதிகம்.
இந்த அதிக இடங்கள், நகர்ப்புறத் தொகுதிகளைத் தாண்டி பகுதி-நகர்ப்புறப் பகுதிகளிலும் பாஜக காலூன்ற வாய்ப்பளிக்கும். ஆனால் அதிக இடங்கள் என்றால் அதிகப் பொறுப்பும் கூடவே வரும். அதிகரித்த வாக்குகளை அதிகத் தொகுதிகளில் வெற்றியாக மாற்றிக் காட்ட வேண்டியிருக்கும்.
பாஜக விரிவடைய நினைக்கும் அதே நேரத்தில், அகாலி தளத்துக்கும் சொந்தச் சவால்கள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் பலவீனமடைந்த கிராமப்புற மற்றும் பந்திக் (சீக்கிய மத) ஆதரவுத் தளத்தை மீண்டும் கட்ட வேண்டும்.
பாரம்பரியமாகக் கிராமப்புற வாக்காளர்களையே நம்பியிருக்கும் கட்சி, வாக்கு வங்கிச் சரிவையும் உள்கட்சிப் பிளவுகளையும் சந்தித்துள்ளது.
ஒரு காலத்தில் அகாலி தளத்தில் இருந்த பல தலைவர்கள் இப்போது வேறு கட்சிகளில் உள்ளனர்.
கிராமப்புற வாக்குகளை நோக்கும் பிற குழுக்களும் போட்டியாக நிற்கின்றன.
அமித் ஷா இந்த விஷயத்தையும் தெளிவுபடுத்தினார். கூட்டணியில் அகாலி தளம் “மூத்த சகோதரனாகவே” தொடரும், முதல்வரும் அகாலி தளத்திலிருந்தே வருவார். பாஜக அதிக இடங்களைப் பெற்றாலும் பாரம்பரியத் தலைமை ஏற்பாடு மாறாது என்பதே இதன் பொருள்.
பர்கத் சிங் இதற்கு, அவர்கள் எந்தப் பாத்திரத்தை வேண்டுமானாலும் முடிவு செய்யட்டும். அதற்கு அர்த்தமில்லை, ஏனென்றால் இந்தக் கூட்டணி வெற்றிபெறாது. இரு கட்சிகளும் தங்கள் ஆய்வுகளில் ஒற்றை இலக்கத்தில் இருந்தன, அதனால்தான் இப்போது ஒன்று சேர்கிறார்கள்.”
இந்தக் கூட்டணிக் கணக்குகளுக்கு நடுவே, பஞ்சாபின் தலித் அரசியல் பெரும்பாலும் விவாதிக்கப்படாமலேயே இருக்கிறது. ஆனால் இங்குதான் ஆம் ஆத்மியின் வெற்றியின் வேர் இருக்கிறது.
தனித்துவமான மக்கள் தொகை அமைப்பு
இந்தியாவில் பட்டியலின மக்களின் பங்கு சுமார் 16.6%. பஞ்சாபில் 2011 கணக்கெடுப்பின்படி இது 31.9%.
இந்தியாவின் மொத்தப் பட்டியலின மக்களில் சுமார் 4.4% பேர் பஞ்சாபில் வாழ்கின்றனர்.
பட்டியலினத்தவர்களுக்குள் சாமார்கள், ஆத்-தர்மிகள், ராம்தாசியாக்கள் ஆகியோரின் அமைப்பு ரீதியான தாக்கம் அதிகம். மஜாபிகள், வால்மீகிகள் போன்றோர் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பின்தங்கியுள்ளனர்.
சீக்கியமும் இஸ்லாமும் சாதிப் பாகுபாட்டை மறுத்தாலும், பஞ்சாப் கிராமங்களில் சாதி அடையாளங்களும் சமூக விலக்கலும் இன்றும் தொடர்கின்றன.

2022: ஆம் ஆத்மியின் சரித்திர சாதனை
117 இடங்களில் 92-ஐ (42% வாக்குகள்) கைப்பற்றி ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மை ஆட்சியை அமைத்தது.
34 பட்டியலின ஒதுக்கீட்டுத் தொகுதிகளில் 29-ஐ வென்றது (85.29% வெற்றி விகிதம்). பஞ்சாப் தேர்தல் வரலாற்றில் எந்தக் கட்சியும் எட்டாத உச்சம் இது.
பிராந்திய வாரியாக, மால்வாவில் 20-ல் 19 இடங்களும், தோவாபா–மாஜாவில் 14-ல் 9 இடங்களும் ஆம் ஆத்மிக்குக் கிடைத்தன.
காங்கிரஸ் ஏன் தலித் ஆதரவை இழந்தது?
அனைவரையும் அரவணைக்கும் கட்சி என்று காங்கிரஸ் கூறிக்கொண்டாலும், தங்களை வெறும் “அடிமை வாக்காளர்களாக” நடத்துவதை தலித் மக்கள் நீண்டகாலமாக எதிர்த்தனர். ஆட்சி அதிகாரத்தில் உண்மையான பங்கு வேண்டும் என்று மாற்றைத் தேடத் தொடங்கினர். 2022-க்குச் சற்று முன் சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து வாக்குகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் முயன்றது. ஆனால் உள்கட்சி மோதல், நவ்ஜோத் சிங் சித்துவுடனான அதிகாரப் போட்டி, அடையாள அரசியலைத் தாண்டிய திட்டமிடல் இல்லாமை ஆகியவற்றால் அந்த வியூகம் தோல்வியடைந்தது. காங்கிரஸ் வெறும் 18 இடங்களையே பெற்றது.
அகாலி தளம், பாஜக: சரிவின் பின்னணி
மதமும் அரசியலும் இணைந்த கட்சி என்றாலும், 1962 முதல் அகாலி தளம் ஜாட் சீக்கியர்களின் முழுக் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகிறது.
சீக்கிய குருத்வாராக்களை நிர்வகிக்கும் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு (SGPC) போன்ற அமைப்புகளில் 80% பதவிகள் ஜாட் சீக்கியர்களிடம் உள்ளன, தலித் சீக்கியர்களுக்கு வெறும் 5% மட்டுமே கிடைத்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. இந்தச் சமூக விலக்கலே தலித் மக்கள் அகாலி தளத்தை விட்டு விலகக் காரணம்.
விவசாயச் சட்டங்களுக்கு எதிரான கடும் எதிர்ப்பு, அகாலி தளத்துடன் நீண்டகாலக் கூட்டணி ஆகியவற்றால் பாஜகவுக்கும் தலித் வாக்குகள் கிடைக்கவில்லை.

பகுஜன் சமாஜ் கட்சியின் வீழ்ச்சி
பஞ்சாபில் தலித் மக்கள் கணிசமாக இருந்தும் BSP காலூன்ற முடியவில்லை. 1992-ல் 16.32% ஆக இருந்த அதன் வாக்கு வங்கி, 2022-ல் 1.7% ஆகச் சுருங்கியது. வாக்காளர்கள் சாதி அடையாளம், கோஷங்களைத் தாண்டி பொருளாதார மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பை எதிர்பார்த்தனர். அடிமட்டக் கட்டமைப்பும் முறையான சமூக-அரசியல் திட்டமிடலும் இல்லாதது, உத்தரப் பிரதேசத்தில் மாயாவதிக்கு ஏற்பட்ட வீழ்ச்சி ஆகியவையும் சரிவுக்குக் காரணங்கள்.
ஆம் ஆத்மியின் வெற்றிச் சூத்திரம்
70 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து ஊழலில் ஈடுபட்ட காங்கிரஸ், அகாலி தளத்துக்குப் பாடம் புகட்ட மக்கள் துடித்தனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் கல்வி, சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் பஞ்சாப் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பு வாக்குறுதிகள், பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் பெண்களையும் இளைஞர்களையும் ஈர்த்தன.
நகைச்சுவை நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த பகவந்த் மான் அவர்களின் எளிய பேச்சு மக்களுக்கு நம்பிக்கை அளித்தது.
இவை அனைத்தும் சேர்ந்து, தலித் வாக்கு வங்கி பெருமளவில் ஆம் ஆத்மிக்கு மாறியது.
இப்போதைய நிலை: நம்பிக்கையும் நெருக்கடியும்
தற்போதைய ஆம் ஆத்மி அமைச்சரவையில் நான்கு தலித் அமைச்சர்கள் உள்ளனர். வேட்பாளர் பட்டியலிலும் தலித்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
காங்கிரஸின் உள்கட்சிப் பூசலும், பாஜக–அகாலி கூட்டணியும் தங்கள் தலித் வாக்கு வங்கியைப் பாதிக்காது என்று ஆம் ஆத்மி உறுதியாக நம்புகிறது.
ஆனால் சில வாரங்களுக்கு முன் நடந்த குல்சர் என்ற தலித் நபரின் தற்கொலை சர்ச்சையாகியுள்ளது. போதைப்பொருள் புழக்கம் குறித்துக் கேள்வி எழுப்பிய அவரை, நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா சாதிரீதியாகத் திட்டியதாகவும், அதனால் மனம் உடைந்தே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதை வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் அரசைக் கடுமையாகத் தாக்குகின்றன.
இது தங்களுக்குப் பாதகமாகாது என்றும் ஆம் ஆத்மி நம்புகிறது.
ஒரு பக்கம், ஒரு காலத்தில் வெல்ல முடியாத கூட்டணி என்று பெயர் பெற்றவர்கள் மீண்டும் கைகோர்த்துள்ளனர். அவர்களிடம் தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல், வேளாண் சட்டங்களின் நிழல், பலவீனமான கிராமப்புறத் தளம் இருக்கின்றன. மறுபக்கம், 34 ஒதுக்கீட்டுத் தொகுதிகளில் 29-ஐ அள்ளிய ஆம் ஆத்மிக்கு இப்போது முதல் முறையாகத் தலித் வாக்குகளில் சர்ச்சை நிழல் விழுந்துள்ளது.
கூட்டணி பழையது, கணக்கு புதியது, வாக்காளர்கள் முன்பை விட விழிப்போடு இருக்கிறார்கள். “நம்பிக்கை பொய்க்குமா, நிறைவேறுமா?” என்பதை 2027 பஞ்சாப் களம் தீர்மானிக்கும்.