“அம்மா.. என்னை கொன்னுடுவாங்க..” நள்ளிரவில் அழுது கொண்டே போன் கால்.. மறுநாள் காலை மாணவி மர்ம மரணம்! | Assam Guwahati Homestay Death: 22-Year-Old Student Dies, 26-Year-Old Man Arrested by Police

Spread the love

India

oi-Vigneshkumar

கவுஹாத்தி: அசாம் மாநிலம் கவுஹாத்தி ஹோம்ஸ்டே ரூமில் 22 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவருடன் தங்கியிருந்த 26 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அந்த இளைஞர் கூறிய போதிலும் அவரது விளக்கத்தை நம்பாத போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரு மோசமான சம்பவம் இப்போது அசாம் மாநிலத்தில் நடந்துள்ளது. அசாம் மாநிலம் கவுஹாத்தி நகரின் புறநகரான கரால் பகுதியில் உள்ள ஹோம்ஸ்டேவில் ஒரு கொடூர கொலை நடந்துள்ளது.. அங்கு தங்கியிருந்த 22 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவருடன் தங்கியிருந்த 26 வயது இளைஞரை போலீசார் கைது செய்து செய்துள்ளனர்.

Assam Guwahati Homestay Death

அசாம் கொலை

உயிரிழந்த மாணவியும் கைது செய்யப்பட்ட ஆசிப் அலி என்பவரும் அங்கு தங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவியின் உடல் கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கவுஹாத்தி மேற்கு துணை காவல் ஆணையர் போலின் டியோரி கூறுகையில், “மாணவி தற்கொலை செய்து கொண்டதாக ஆசிப் அலி தெரிவித்ததாக கூறினார். ஆனால் அவரது விளக்கத்தை நாங்கள் நம்பவில்லை. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. உடலில் அல்லது தரையில் ரத்தக்கறை எதுவும் காணப்படவில்லை. இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான காரணம் குறித்து மேலும் தெளிவு கிடைக்கும்” என்றார்.

திக்திக் சம்பவம்

இதற்கிடையே மாணவியின் குடும்பத்துக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் கூறிய தகவல் இந்த வழக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவரது தந்தையின் நண்பரும், குடும்பத்துக்கு நெருக்கமானவருமான அந்த நபர், மாணவி சம்பவத்துக்கு முந்தைய நாள் மாலை சுமார் 5 மணியளவில் தான் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்தார். நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சிற்றுண்டி சாப்பிட செல்வதாக குடும்பத்தினரிடம் மாணவி கூறியதாகவும், இரவு நேரமானால் அங்கேயே தங்கிவிடுவதாக தாயிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

2 மணிக்கு வந்த போன் கால்

ஆனால் அதிகாலை சுமார் 2 மணியளவில் மாணவி தனது தாயை தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது அழுதுகொண்டே, “அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள், அம்மா” என்று கூறியதாக குடும்ப நண்பர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு மாணவியின் செல்போன் பறிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். இந்த தகவல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து உடனடியாக மாணவியின் குடும்பத்தினர் அருகிலுள்ள அசாரா காவல் நிலையத்துக்கு சென்று தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்குள் மாணவியின் உடல் உள்ளூர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகவும் குடும்ப நண்பர் கூறியுள்ளார்.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவத்தில் ஹோம்ஸ்டே ஊழியர் ஒருவர் கூறிய தகவலும் போலீஸ் விசாரணையில் கவனம் பெற்றுள்ளது. இரவு நேரத்தில் ஒரு ஆண் குரல் சத்தமாக கேட்டதாகவும், “தாதா, எழுந்திரு… எழுந்திரு” என யாரோ ஒருவரை எழுப்புவது போல் அந்த குரல் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து என்னவென்று பார்க்க மற்ற இரண்டு ஊழியர்களையும் அழைத்து கொண்டு வெளியே வந்ததாகவும், இருப்பினும் அப்போது அங்கு யாரையும் காணவில்லை என்றும் அவர் கூறினார்.

சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் ஹோம்ஸ்டேவுக்கு வந்தபோது அழுகை சத்தம் கேட்டதாகவும், அந்த சத்தம் வந்த ரூமிற்குள் சென்றபோது தரையில் மாணவியை அந்த இளைஞர் கையில் பிடித்திருந்து கொண்டு இருந்ததை பார்த்ததாகவும் ஊழியர் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவியை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அந்த ஊழியர் கூறியுள்ளார்.

போராட்டம்

மாணவி இந்து சமூகத்தை சேர்ந்தவர் என்றும், கைது செய்யப்பட்ட ஆசிப் அலி முஸ்லிம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை லவ் ஜிஹாத் என சொல்லி போராட்டங்களில் இறங்கியுள்ளனர். இருப்பினும், போலீசார் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவொரு தகவலையும் கூறவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *