அரசு வேலை என்று போலி நியமன ஆணை; 4 பேரிடம் ரூ.16 லட்சம் மோசடி – மருத்துவர் உட்பட இருவர் மீது வழக்கு!

Spread the love

நாமக்கல் மாவட்டம், முத்துகாட்டுப்பட்டியில் 28 வயது பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், அவர் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனக்கு அரசு வேலை வாங்கித் தரும்படி திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள செந்தில்குமார் (வயது: 45) என்பவரை அணுகியுள்ளார். அவர், திருச்சியில் உள்ள மருத்துவர் பழனிபாரதி என்பவரை அணுகும்படி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனை அருகில் மருத்துவர் பழனிபாரதியை அந்த பெண் சந்தித்துள்ளார். அப்போது அவர், புரோகிராமிங் மேனேஜர் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதைத் தொடர்ந்து, அந்தப் பெண் ரூ.5 லட்சத்தை மருத்துவரிடம் கொடுத்துள்ளார். மேலும், தங்கள் பகுதியில் உள்ள ஒரு பெண் உட்பட 3 பேருக்கு அரசு வேலை வாங்கி கொடுக்கக் கூறி ரூ.11,59,000-த்தை மருத்துவரிடம் கொடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அந்த இளம்பெண்ணுக்கு ஒரு பணி நியமன ஆணையை மருத்துவர் கொடுத்துள்ளார். அதைப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்துக்குச் சென்று கேட்டபோது, அது போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதனால், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், இது பற்றி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், மருத்துவர் பழனிபாரதி, அவருக்கு உடந்தையாக இருந்த செந்தில்குமார் ஆகியோர் மீது திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். மேலும், செந்தில்குமாரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *