
தவெக ஆட்சி அமைந்து நேற்றுடன்(நவ.,10) ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் மீதான புகார்கள் அடுத்தடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான வாட்ஸ்அப் தகவல்களை அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், திருச்சி துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏவும் துணை சபாநாயகருமான ரவிசங்கர், தொகுதி பிரச்சினைகள் குறித்துப் பேச வந்த ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தவெக எம்எல்ஏக்கள் கூட்டம், மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
“ஆதாரம் இல்லாமல் குற்றவாளியாகச் சித்தரிக்கலாமா?” – மாணிக்கம் தாகூர்
இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு குறித்துப் பேசினார்.
அப்போது, “கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால், அவர் என்ன சொல்கிறார் என்பதையும் கேட்க வேண்டாமா? அவரைப் பற்றி யாராவது வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பினால், அதற்கு அவர்தானே பதிலளிக்க வேண்டும்?
அந்த எம்எல்ஏ தனது மீதான குற்றச்சாட்டை மறுத்து விளக்கம் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளைப் பாருங்கள், செல்போனைச் சோதித்துப் பாருங்கள்; நான் அப்படிச் செய்யவில்லை என்று கூறியுள்ளார். அப்படியிருக்கும்போது, அவரை ஏற்கெனவே குற்றவாளியாக முடிவு செய்துவிட்டதைப் போலப் பேசுவது எந்த வகையில் நியாயம்?
ஒரு வாட்ஸ்அப் செய்தி வந்துவிட்டது என்பதற்காக எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டுமா? யார் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்? யார் புகார் அளித்திருக்கிறார்கள்? அந்த எம்எல்ஏ பாவம் நான் அப்படியெல்லாம் பேசவில்லை. எதுவாக இருந்தாலும் சிசிடிவி காட்சிகளைப் பாருங்கள் என்று சொல்கிறார். அவர் இல்லை என்று மறுக்கும் போது அவர் தவறு செய்துவிட்டதாகவே முடிவு செய்து பேசுவது சரியல்ல என்று சம்பந்தப்பட்ட எம்எல்ஏ விளக்கம் அளித்த பிறகும் அவரைக் குற்றவாளியைப் போலச் சித்தரிப்பதுதான் மீடியா ட்ரையல்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக துணைப் பொதுச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் ஒரு பெண் குறித்து பேசியதாகக் கூறப்படும் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்தார். “உதயநிதி பேசிய பேச்சு அயோக்கியத்தனமானது, அருவருக்கத்தக்கது. தஞ்சாவூரில் 2,000 பேர் முன்னிலையில் ஒரு பெண்ணைப் பற்றி அவர் பேசியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களை இழிவாகவும் அதிகார மமதையுடனும் பேசுவது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்தார்.
மேலும், “உதயநிதி பேசியதைப் போன்றே கள்ளக்குறிச்சி எம்எல்ஏவும் பேசியதற்கோ, செய்ததற்கோ ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? இருந்தால் காட்டுங்கள். நடந்த ஒரு சம்பவத்தையும், இன்னும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டையும் ஒன்றாக ஒப்பிடுவது தவறானது” என்றும் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்ததாகக் கூறப்படுவது குறித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், அதற்கான ஆதாரம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். மாவட்ட ஆட்சியரும் தலைமைச் செயலாளரும் நிர்வாகம் தொடர்பாகத் தினமும் பேசிக்கொள்ளக்கூடும்; அதைக் கொண்டு மட்டும் ஒரு முடிவுக்கு வர முடியாது என்றும் தெரிவித்தார்.
“கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்பதை ஆராய வேண்டும். அதற்கு முன்பே அவர் தவறு செய்துவிட்டதாக முடிவெடுப்பது சரியல்ல. நான் யாருக்கும் சப்பைக்கட்டு கட்டவில்லை. வெவ்வேறு சம்பவங்களை ஒன்றாகக் கலந்து பார்க்கக் கூடாது” என்றும் அவர் கூறினார்.
ரவிசங்கர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதான தாக்குதல் புகார் குறித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தால், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டும், ரவிசங்கர் மீதான புகாரும் வெவ்வேறானவை; இரண்டையும் ஒன்றாகக் குழப்பக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
காங்கிரஸுக்குள் புதிய பஞ்சாயத்து?
முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான மெசேஜ் அனுப்பியதாக அருள் விக்னேஷ் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக எழுந்துள்ள இத்தகைய புகாரை அலட்சியப்படுத்தக் கூடாது என்றும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
ஆனால், தற்போது மாணிக்கம் தாகூர், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதற்கு முன்பே அருள் விக்னேஷைக் குற்றவாளியாகச் சித்தரிக்கக் கூடாது எனப் பேசியுள்ளார். ஒரே விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் வெவ்வேறு கருத்துகளை முன்வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் இந்த விவகாரம் புதிய விவாதத்தையும் பஞ்சாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.