இத்தகைய கடினமான கேள்விகள் மக்களைக் குழப்புவதற்காகவே கேட்கப்படுகின்றன. யாரைச் சேர்க்க வேண்டும், யாரை நீக்க வேண்டும், யாரைக் குழப்ப வேண்டும் என்பதை முன்பே தீர்மானித்துச் செய்யப்படும் ஒரு விஷயமாகவே இது தெரிகிறது. எனவே, இந்தக் குழப்பம் நிர்வாகத்தின் தவறு கிடையாது. இது வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்படும் ஒரு செயல்முறை ஆகும்.
யார் அதிகமாகக் குரல் எழுப்புகிறார்களோ, அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக ஒரு தற்காலிக அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, அவர்கள் என்ன செய்ய நினைக்கிறார்களோ அதைத் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் தெளிவின்மையே ஒரு திட்டமிடப்பட்ட சூழ்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் முதன்மை நோக்கம் தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், தொடக்கத்திலிருந்தே தேர்தல் ஆணையம் “சுத்தம் செய்தல்’ (Cleanse / Clean) என்ற சொற்களையே பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது, யாரைச் சேர்க்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, யாரையெல்லாம் பட்டியலிலிருந்து நீக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.
இறந்துபோனவர்களின் பெயர்களை நீக்குவது என்பது வழக்கமாக நடக்கும் ஒரு நடைமுறைதானே தவிர, அதுவே முதன்மை நோக்கமாக இருக்க முடியாது. ஆனால், தேர்தல் ஆணையம் தனது முதன்மை நோக்கத்தையே தலைகீழாக மாற்றி, வாக்காளர்களை நீக்குவதையே பிரதான வேலையாகச் செய்கிறது.