
– வி.ராம்ஜி
சில வார்த்தைகளைச் சொல்லும்போதே, ஒரு கம்பீரம் களைகட்டத் தொடங்கிவிடும். மலைக்கோட்டை என்று சொன்னாலே உச்சிப்பிள்ளையார் எனும் வார்த்தை உடனே ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும். சீராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, திருச்சி என்றெல்லாம் சொல்லப்படும் ஊருக்கு, மலைக்கோட்டை மாநகரம் என்கிற பெயர்தான் கம்பீரம்; அழகு!
திருச்சியின் தனித்த அடையாளம் மலைக்கோட்டை! மலையே இல்லாத பகுதியில் இந்த மலை என்பது எப்படி எனும் கேள்விதான் மலைக்கவைக்கும் மலைக்கோட்டையின் மகிமை! மலைக்கோட்டை வாசலில் உள்ள மாணிக்க விநாயகரும் சரி… உச்சியில் உச்சிமலையில் உள்ள உச்சிப்பிள்ளையாரும் சரி… நடுவே… உச்சிக்குச் செல்லும் வழியில் உள்ள தாயுமானவ சுவாமியும் சரி… எல்லோருமே சக்திமிக்கவர்கள்; சாந்நித்தியம் கொண்டவர்கள்!
உண்மையில் மலைக்கோட்டைக் கோயில் என்பது ஸ்ரீதாயுமானவ சுவாமி திருக்கோயில்தான். அது சிவனார் குடிகொண்டிருக்கும் கோயில்தான். ஆனால், அப்பாவை விட மகன் பெயரைத் தட்டிச் சென்ற தலமாக மலைக்கோட்டை மாறிப்போனது!
உமாதேவி, பிரம்மன், இந்திரன், ராமபிரான், அர்ஜுனன், அனுமன், விபீஷணன், ஐயனார், நாக கன்னிகைகள், அகத்தியர், ஜடாயு, சப்த ரிஷிகள், திரிசிரன், சாரமா முனிவர், ரத்னாவதி, ஸ்ரீமௌனகுரு, தாயுமான அடிகள், அத்திரி முனிவர், தூமகேது, சேக்கிழார் என ஏகப்பட்டோ இங்கே இந்த ஸ்தலத்துக்கு வந்து பூஜித்திருக்கிறார்கள்; தவம் மேற்கொண்டிருக்கிறார்கள். பலன் அடைந்திருக்கிறார்கள். சிவ தரிசனம் பெற்று ‘யதேஷ்டம் யதேஷ்டம்’ என்று சிலிர்த்துப் போயிருக்கிறார்கள்.
ராவணனின் சகோதரன் திரிசிரன். திரி என்றால் மூன்று சிரம் என்றால் தலைகள். மூன்று தலைகளைக் கொண்டவன் திரிசிரன். திரிசரன் என்று மருவிப்போனது. இங்கு உள்ள சிவனாரை பூஜித்து பேறு பெற்றான் திரிசிரன். அதனால் இந்தத் தலத்துக்கு ‘சிராப்பள்ளி’ என்று பெயர் அமைந்தது. மலை மீது உச்சிப் பிள்ளையார் கோயிலின் பின்புறம் உள்ள கல் படுகைகள், 5-ஆம் நூற்றாண்டில் சமண முனிவர்களின் வசிப்பிடமாகத் திகழ்ந்ததாகச் சொல்லும் கல்வெட்டுகளும் இருக்கின்றன. சமண முனிவர்களில் ஒருவரது பெயர் சிரா. அவரின் பெயருடன் சமணப் பள்ளியை இணைத்து, ‘சிராப்பள்ளி’ என்று பெயர் வந்தது என்றும் முன்னதாக ‘திரு’ அடைமொழியுடன் திருச்சிராப்பள்ளி என மாறியதாகவும் ஸ்தல புராணம் பல கோணங்களில் விவரிக்கிறது.
10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாராயண வேம்பையர் கோன் என்பவர் ‘சிராமலை’ என்று புகழ்ந்து தன் குறிப்புகளில் தெரிவித்திருக்கிறார். அதேபோல், ராஜராஜனின் கல்வெட்டு ‘சிற்றம்பர்’ என்று பொறித்து வைத்திருக்கிறார். அருணகிரிநாதரும் தாயுமானவ சுவாமிகளும் ‘சிரகிரி’ என்றும் திருச்சியைக் குறிப்பிட்டு உள்ளனர்.
சுமார் 16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் ‘திரிசிரபுரம்’ என்றும், அதன் பிறகு ஆங்கிலேயர் காலத்தில் ‘டிரிச்சினாபள்ளி’ என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இப்போது திருச்சிராப்பள்ளி சுருங்கி திருச்சியாகிவிட்டது. இந்தத் தலத்தைப் பற்றி திருஞானசம்பந்தர் 11 பாடல்களும், அப்பர், மாணிக்கவாசகர் முறையே நான்கு மற்றும் இரண்டு பாடல்களுமாக தேவாரம் பாடியுள்ளனர்.
திருக்கயிலாயம் போன்று சிராப்பள்ளி மலையும் மூன்று அடுக்குகள் கொண்டது என்பதாக அமைந்திருப்பது மற்றுமொரு அதிசயம்! அதனால் மலைக்கோட்டையை, இதை ‘தட்சிண கயிலாயம்’ என்றும் சொல்கிறார்கள். தட்சிண என்றால் தெற்கு என்பது தெரியும்தானே! இன்னொரு ஆச்சரியம்… கயிலாய மலைக்கு தோஷம் உண்டு. அதை ராவணன் அசைத்துப் பார்த்தான். பொதிகை மலைக்குத் தோஷம் உண்டு; அது இசைக்கு உருகிய மலை. சிரா மலைக்கு தோஷம் என்பதே இல்லையாம்! பூமியின் வயது சுமார் 460 கோடி ஆண்டு. சிரா மலையின் வயது சுமார் 230 கோடி ஆண்டு. இமயத்தின் வயது சுமார் 4 கோடி ஆண்டுகளே என்று சரித்திர ஆய்வாளர்கள் நூல்கள் மூலம் தெரிவிக்கிறார்கள்!
16-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விஸ்வநாத நாயக்கர் என்பவரால் கொத்தளங்கள் அமைக்கப் பட்டு வலுப்படுத்தப்பட்ட மலைக்கோட்டை, சுமார் 200 ஆண்டு காலம் பல போர்கள் ஏற்படக் காரணமாகவும் இருந்திருக்கிறது. 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடந்த யுத்தத்தின்போது, மலைக்கோட்டை வெடிமருந்துக் கூடமாக விளங்கியதாகவும் குறிப்புகள் இருக்கின்றன. இதற்கு சாட்சியமாக, மலை மீது உள்ள குகைக் கோயிலின் தரைப் பகுதியில் குழிகள் இருப்பதை இன்றைக்கும் பார்க்கலாம்!
18-ஆம் நூற்றாண்டில், அருகிலுள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில்தான் பிரெஞ்சுப் படைகள், பிரிட்டிஷ் படைகளிடம் சரண் அடைந்தன. அதாவது ஜம்புகேஸ்வரர் ஆலயம் என்பது திரு ஆனைக்கா கோயில். இங்கே பிரிட்டிஷ் படைகளுக்கு வெற்றி தேடிக் கொடுத்த மேஜர் லாரன்ஸின் நினைவாக, லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் ஆலயத்தில் பொறிக்கப்பட்டுள்ள சின்னத்தில், திருச்சி மலைக்கோட்டையின் படமும் இடம்பெற்றுள்ளது.
கீழ்க் கோபுர வாயிலுக்கு அருகில் ஆயிரங்கால் மண்டபம் இடம்பெற்றிருந்தது. இதைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் இருக்கின்றன. இந்த மண்டபம் 17-ஆம் நூற்றாண்டில், ‘அனுப்பி’ என்ற பெண்ணால் கட்டப்பட்டது என்கிறார்கள். கோபுர வாயிலில் உள்ள தூண் ஒன்றில் அவளின் உருவம் பொறிக்கப்பட்டு பெயரும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆயிரங்கால் மண்டபத்தில், 1772-ல் வெடி விபத்து ஏற்பட்டதால் இந்தப் பகுதி பலத்த சேதத்துக்கு ஆளானது. பின்னரே இந்தப் பகுதி இப்போதைய கடை வீதியாக மாறிப்போனது. .
1849-ல் விநாயக சதுர்த்தி விழாவில் எதிர்பாராத அளவுக்கு கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வந்துவிட்டதாம். கூட்ட நெரிசலில், தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மலையில் விபத்து ஏற்பட்டு பலர் இறந்தனர். அதன் பின்னர், 1866-ல் இரும்புத் தண்டவாளங்கள் இரண்டு பக்கத்திலும் கைப்பிடிகளாக அமைக்கப்பட்டன.
மலைக் கோயிலை கிழக்கிலிருந்து பார்த்தால் பிள்ளையார் முகம் போலவே தெரியும். வடக்கில் இருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போலத் தெரியும். மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும் தெரியும். தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும், தெரியும்! இப்படியான கட்டமைப்பு கொண்ட மலைக்கோட்டை ஆச்சரிய, அதிசய, அற்புதம்தான்!
உச்சிப் பிள்ளையார் கோயிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போலவே இருக்கும் என்பதை இப்போதும் பார்த்து வியக்கலாம்!
மலைக்கோயில் மூன்று நிலையாக அமைந்துள்ளது. அடிவாரத்தில், மாணிக்க விநாயகர் சந்நிதி உள்ளிட்ட பகுதியை முதல் நிலை என்கிறார்கள். உச்சிப்பிள்ளையார் கோயிலில் குடிகொண்டிருக்கும் அம்பாளின் திருநாமம். மட்டுவார்குழலம்மை. சிவனாரின் திருநாமம் ஸ்ரீதாயுமானவர். இவர்கள் இருக்கின்ற கோயில் இரண்டாம் நிலை எனப்படுகிறது. மலைக்கோட்டை கோயில் என்பது குடைவரைக்கோயில் எனும் ஆச்சரியம் கொண்டதாகவும் திகழ்கிறது.
குடைவரைக்கோயில், உச்சி விநாயகர் கோயில் மற்றும் மணிமண்டபம் உள்ளிட்ட பகுதிகள் மூன்றாம் நிலையாகச் சொல்லப்படுகிறது. ஆகவே ’முத்தலை மலை’ என்றும் பெயர் அமைந்தது! மலைக்கோட்டை நாயகா… உச்சிப்பிள்ளையாரப்பா. எங்கள் உச்சந்தலையில் உன் தும்பிக்கை வைத்து அருள் வழங்கப்பா…என வேண்டுவோம்!