ஆளவந்தான்: `அந்த கார்ட்டூன் ஐடியா கிரேஸி மோகனுடையது!' – நினைவுகளை பகிரும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

Spread the love

சினிமா விகடன் சார்பாக கமல்ஹாசன் நடித்த ‘ஆளவந்தான்’ படத்தின் 25-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் படத்தின் உருவாக்கம், தொழில்நுட்ப சவால்கள் மற்றும் ‘கில் பில்’ தொடர்பான சுவாரசிய நினைவுகள் குறித்து பேட்டி கண்டோம். அவர் ‘தாயம்’ நாவலில் தொடங்கி மோஷன் கண்ட்ரோல் கேமரா, அனிமேஷன் காட்சி வரை இப்படம் கடந்து வந்த பயணத்தை விரிவாக விவரித்துள்ளார்.

உங்களோட படங்களிலேயே தனித்துவமான படம் ஆளவந்தான். 1984 -ல கமல்ஹாசன் எழுதுன நாவல் தான் ஆளவந்தான் படம் ஆகுது. அப்போவே தாயம் கதை பற்றி அவரிடம் பேசியது உண்டா?

25 வருசமா ஒரு படத்தப்பத்தி இன்னமும் பேசுறதே பெரிய விஷயம். கமல் சாரோட பயணம் பண்ணதுல பாக்குறது அவரோட வளர்ச்சி, சினிமாவைப் பற்றிய புரிதல் மற்றும் அதில் அவர் விரிவடைந்து கொண்டே இருக்கிறார். தயாரிப்பாளர் தாணு சார் வந்து உங்க இரண்டு பேர் கூடவும் சேர்ந்து ஒரு படம் பண்ணணும்ணு சொல்லி வந்தார்.

ஆளவந்தான்

உடனே நான் ஆச்சரியமாயிட்டேன். ஏன்னா கமல் சார் கூட படம் பண்ணுறது ஒரு பல்கலைக்கழகம் கூட வேலை பார்க்குற மாதிரி. நான் பாம்பேல இருந்து வந்ததுனால அவ்வளவா தமிழ் படிக்க வராது. அதுனால எனக்கு தாயம் பற்றி தெரியாது. தாணு சார் வந்து எதாவது வித்தியாசமாக பெரிய படமாக பண்ணுங்கன்னு கமல் சார் கிட்ட சொன்னார்.

அப்போ தான் தாயம்கிற கதைய பற்றி கூறுகிறார். கமாண்டோ டேர்டெவில் மற்றும் நந்து டேர்டேவில். இருவரில் கமாண்டோ டேர்டேவில் நல்ல திட்டமிடக்கூடியவர். நந்து டேர்டெவில் அது எதுவும் இருக்காது. நந்து கேரக்டர் ஒரு அனிமல் என இப்படி இரண்டு வேறுபட்ட கேரக்டர சொல்லிட்டு இரண்டும் கமல் மாதிரி இருக்கக் கூடாது என கூறினார். இப்படிப்பட்ட யோசனைய சொன்னவுடனே நாம பண்ணலாம்னு ஓகே சொல்லிவிட்டேன். அப்படித்தான் இந்த தாயம் ஆளவந்தானாக மாறியது.

இந்த படத்துல முக்கியமான விஷயம் மோஷன் கண்ட்ரோல் கேமரா மற்றும் தொழில்நுட்ப முயற்சிகள்… இதை எப்படி கொண்டு வந்தீர்கள்?

ஏற்கனவே பல இரட்டை வேடப் படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இதில் தோற்றத்திலும் உடல்வாகிலும் பெரிய வேறுபாடுகள் இருந்ததால் தத்ரூபமான காட்சிகளுக்கு அப்படி என்ன புதுசா பண்ணலாம்னு யோசிக்கும் போது தான் மோஷன் கண்ட்ரோல் கேமரானு ஒன்னு இருக்கு. இது அமெரிக்காவுல பயன்படுத்துறாங்க. மலேசியாவுல இருக்குனு கமல் சார் சொன்னார்.

ஆளவந்தான்

உடனே தாணு சார் கிட்ட சொல்லி அதை இங்க கொண்டு வந்தோம். அப்புறம் அதை எப்படி பயன்படுத்த போறோம்னு யோசிக்கும் போது ஒளிப்பதிவாளர் திரு மற்றும் கலை இயக்குநர் சமீர் சந்தா ஆகியோருடன் இணைந்து, அமெரிக்கா போகாம ஆஸ்திரேலியாவில் உள்ள ‘கட்டிங் எட்ஜ்’ (Cutting Edge) நிறுவனத்தை அணுகி, அவர்களது பணியை ஆய்வு செய்து மோஷன் கண்ட்ரோல் தொழில்நுட்பத்தை அவர்களின் உதவியுடன் கொண்டு வந்தோம். இந்த படம் ஆரம்பிக்கும் போதே இதற்கு முன்பு யாரும் பயன்படுத்தாத தொழில்நுட்பங்களை பயன்படுத்தி படம் பண்ணணும் தான் இறங்குனோம்.

அந்த காலகட்டத்துல ஆளவந்தான் மற்றும் அபை இது இரண்டையுமே தமிழ், இந்தி இரண்டு மொழிலயும் எப்படி எடுத்திங்க?

இந்த படம் இந்தில டப்பிங் பண்ணல. இரண்டு வெர்சனா படம் எடுத்தோம். இந்தில அப்பா, அம்மா, டாக்டர் கதாபாத்திரம் வேற வேற. இரண்டு வெர்சனுக்கும் கமல் சார், ரவீணா டண்டன், விக்ரம் கோக்கலே இருப்பாங்க. ஆனா நிறைய விஷயங்களை மாத்துனோம். ஒவ்வொரு ஷாட்டும் இரண்டு வெர்சனிலும் படம் எடுத்தோம். அது தான் சவாலாக இருந்தது. ஏன்னா இந்தி மொழில அதுக்குன்னு ஒரு டைம் எடுக்கும். தமிழ்ல ஒரு மாதிரி இருக்கும். அதனால மோஷன் கண்ட்ரோல்ல ஒரே டப்பிங்ல பண்ணா நல்லா இருக்காது என முடிவு பண்ணி இந்தி, தமிழ் என இரண்டு மொழிலையும் ஒரே நேரத்துல படம் எடுத்தோம். 

இன்டர்நெட்ல அதிகம் பேசுறது படத்தோட அனிமேஷன். ஏன்னா குவென்டின் டாரன்டினோ ‘கில் பில்’ படத்துக்கு அதுல இன்ஸ்பிரேஷன் ஆகிதான் பண்ணேன்னு சொன்னது… இது எல்லாம் எப்படி இருந்தது?

போதைப்பொருள் மற்றும் பிரமையின் உச்சத்தில் நந்து தன் அண்ணியையே அரக்கியாகக் கருதித் தாக்கும் வன்முறைக் காட்சியை நேரடியாகக் காட்டுவது கடினம், முதலில் மணிஷா கேரக்டரத்தான் முதலில் கொலை பண்ணுவாரு. அது எப்படி போதையில ஒரு பெண்ணை அடிக்குறத காட்டுறது என யோசிக்கும் போது ஒரு நாள் கிரேஸி மோகன் மற்றும் மதன் சாரிடம் இந்த சீன் பத்தி கமல் சார் சொன்னார்.

சுரேஷ் கிருஷ்ணா

அப்போ மோகன் சார் வேடிக்கையாகச் சொன்னார், குழந்தைங்க பார்க்குற டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனில் கூட அதிக வன்முறை காட்சி இருக்கு. நாம சினிமாவில் பண்ண யோசிக்க வேண்டி இருக்கு என கூறினார். அதை கமல் சார் அப்படியே புடிச்சிக்கிட்டாரு. அப்படி உருவானது தான் அந்த அனிமேஷன் காட்சி. இந்த அனிமேஷன் காட்சி பார்த்துட்டு எங்களுக்கு கிடைச்ச பாராட்டுக்கள் ஏராளம் என மகிழ்ச்சியோட கூறினார்.

 ஒரு நாள் நண்பர் ஒருவர் வெனிஸ் பிலிம் பெஸ்டிவல் போயிருக்கும் போது குவென்டின் டாரன்டினோ கூட பேசும் போது அவர் ஆளவந்தான் படத்தில் உள்ள அனிமேஷன் காட்சி மூலம் தான் இன்ஸ்பிரேஷன் ஆகி கில் பில் சினிமாவில் பயன்படுத்தியதாக கூறியதாக சொன்னார். அத நாங்க திரும்ப உண்மை தானா என சரிபார்த்த போது அது உண்மை என தெரியவந்தது. நெனைச்சு கூட பார்க்க முடியல ஹாலிவுட்டில் சிறந்த இயக்குநர் அவரோட படத்துக்கு இந்த ஐடியா இங்க இருந்து தான் எடுத்தேன்னு சொல்லும் போது ரொம்ப பெருமையா இருந்தது.

படம் ரிலீஸ்க்கு அப்புறம் நிறைய பேரு பேசி இருப்பாங்க. நீங்க ரஜினி சாருக்கு ரொம்ப நெருக்கம். அவர் பார்த்துட்டு என்ன சொன்னாரு? 

ரஜினி சாருக்கு தனியாகவே ஷோ பண்ணி காமிச்சோம். அவரு பார்த்துட்டு என்னையா கமல், என்ன படம் இது, அப்படியே ஷேக்காகிட்டாரு. அந்த படம் ஏதோ ஒரு இடம் மட்டும் ஆச்சரியப்படுத்தாது கண்டிப்பா எல்லாம் இடமும் ஆச்சரியப்படுத்தும். என்னோட படங்களின் வரிசையில் இந்த படம் கண்டிப்பா தனியாக நிற்கும் :

முழு பேட்டியை காண..!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *