International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்தின் காரணமாக உலகப் பொருளாதாரத்தின் இதயத் துடிப்பு என்று வர்ணிக்கப்படும் ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட உள்ளது. கடந்த சில மாதங்களாக உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியிருந்த இந்த விவகாரம், இப்போது ஒரு சுமுகமான முடிவை நோக்கி நகர்கிறது. இது ஏன் முக்கியமானது? இதனால் இந்தியாவுக்கு என்ன லாபம்? விரிவாகப் பார்ப்போம்.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட நேரடி மோதல்கள் காரணமாக, வெறும் 30 கிலோமீட்டர் அகலம் கொண்ட ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது. இந்த ஒரு சிறிய கடல் வழிப்பாதை மூடப்பட்டதால் அங்குக் கப்பல் போக்குவரத்து நின்றது.

பாதிப்பு
இதனால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்த நிலையில், உலகெங்கிலும் பங்குச் சந்தைகள் மற்றும் கரன்சி மதிப்புகள் சரிந்தன. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து சாமானிய மக்களின் பாக்கெட்டைப் பதம் பார்த்தது. குறிப்பாகக் கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளை இது மிகக் கடுமையாகப் பாதித்தது.
இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம், உலக நாடுகளுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. “உலக நாடுகளின் கப்பல்களே, உங்கள் இன்ஜின்களை ஸ்டார்ட் செய்யுங்கள்.. எண்ணெய் பாயட்டும்!” என்று அவர் உற்சாகமாகத் தெரிவித்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் போர் மேகங்கள் விலகி, ஹார்முஸ் நீரிணை மீண்டும் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
ஹார்முஸ்
உலகில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய்யில் சுமார் 20 சதவீதம் இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது. சவுதி அரேபியா, ஈராக், ஐக்கிய அமீரகம், குவைத் மற்றும் கத்தார் போன்ற முக்கிய நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு இதுவே பிரதான வழி. ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியான உடனேயே, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4.55 சதவீதம் குறைந்து ஒரு பேரல் 83.36 டாலராக மாறியுள்ளது. ஆசியப் பங்குச் சந்தைகளும் எழுச்சி கண்டுள்ளன.
நீரிணை திறக்கப்பட்டவுடன், பாரசீக வளைகுடாவில் தேங்கிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான எண்ணெய் மற்றும் எரிவாயு டாங்கர் கப்பல்கள் ஆசிய நாடுகளை நோக்கிப் பயணிக்கத் தொடங்கும்.. கச்சா எண்ணெய் மட்டுமின்றி ஈரான், சவுதி, கத்தார் போன்ற நாடுகளிலிருந்து உரம் மற்றும் பிளாஸ்டிக் தயாரிக்கத் தேவையான ‘நாப்தா’ விநியோகம் சீராகும். இது ஆசிய நாடுகளின் விவசாயிகளுக்கும், உணவுப் பாதுகாப்புக்கும் மிகவும் அவசியம். வீடுகளுக்குத் தேவையான சமையல் எரிவாயு விநியோகமும் தடையின்றி கிடைக்க வழிவகை ஏற்படும்.
எல்லாம் சரியாகாது
ஆனால், ஹார்முஸ் திறக்கப்பட்ட உடனேயே இவை எல்லாம் நடந்து, உலகமே சுமுகமாகிவிடுமா என்றால் இல்லை.. ஏனென்றால் போர்க் காலத்தில் கடலில் வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் (முதலில் முடிக்கப்பட வேண்டும். சவுதி, குவைத் போன்ற நாடுகளில் உள்ள எண்ணெய் உற்பத்தி ஆலைகள் போரினால் சேதமடைந்துள்ளன. அவற்றைச் சீரமைக்கக் காலம் எடுக்கும். கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இயற்கை எரிவாயு விலை குறைய 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம். எனவே, முழுமையான இயல்பு நிலை அடுத்த ஆண்டுதான் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா
உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களில் இந்தியாவும் ஒன்று. ஹார்முஸ் நீரிணை திறப்பு இந்தியாவுக்குப் பல வழிகளில் நிம்மதி அளிக்கிறது.. முதலில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் இந்தியாவின் இறக்குமதிச் செலவு குறையும். இது நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க உதவும். எரிபொருள் விலை குறைந்தால், போக்குவரத்துச் செலவு குறையும். இதனால் காய்கறிகள் முதல் கட்டுமான பொருட்கள் வரை அனைத்தின் விலையும் குறைய வாய்ப்புள்ளது.
இறக்குமதிச் செலவு குறைவதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும். விமானப் போக்குவரத்து, உர உற்பத்தி, பிளாஸ்டிக் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகள் பெரும் லாபமடையும். இப்படி ஒரு போர் நிற்பதால் பல்வேறு வழிகளிலும் இந்தியாவுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கவே செய்யும்.
தற்காலிக நம்பிக்கை மட்டுமே!
தற்போதைய சூழல் சாதகமாகத் தெரிந்தாலும், இது ஒரு ‘தற்காலிக நம்பிக்கை’ மட்டுமே. ஏனென்றால் இப்போது இறுதியாகியுள்ளது தற்காலிக உடன்படிக்கை மட்டுமே.. அடுத்த 60 நாட்களில் இரு தரப்பும் முக்கியமான விஷயங்களைப் பேசி தீர்க்க வேண்டும். அதற்குள் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் பதற்றம் உருவானால், நிலைமை மீண்டும் பழையபடி மோசமடையலாம். ஆனாலும், இப்போதைக்கு ஹார்முஸ் நீரிணை திறக்கப்படுவது உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு மிகப்பெரிய ‘ஆக்சிஜன்’ சிலிண்டராகப் பார்க்கப்படுகிறது.