Business
-Vigneshkumar
வாஷிங்டன்: அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் இன்று வட்டி விகிதம் தொடர்பாக முக்கிய முடிவை அறிவிக்க உள்ளது. கெவின் வார்ஷ் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் இந்த கூட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏன் இந்த முடிவு முக்கியமானது, அமெரிக்கா ஈரான் அமைதி ஒப்பந்தம் எப்படிப் பாதிக்கும், மற்றும் தங்கம் விலையில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது ரிசர்வ் வங்கியைப் போலவே அமெரிக்க பெடரல் வங்கி தான் அங்கு வட்டி விகிதம் சார்ந்து முக்கியம் முடிவுகளை எடுக்கும். பணவீக்கம். பொருளாதாரம் எனப் பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பல முறை கூடி ஆலோசனை நடத்துவார்கள். அதன்படி நேற்றும் இன்றும் அமெரிக்க பெடரல் வங்கி ஆலோசனை நடத்திய நிலையில், இன்று தனது இறுதி முடிவை அறிவிக்கிறது.

அமெரிக்க பெடரல் வங்கி
இதற்கு முன்பு கடந்த 8 ஆண்டுகளாக ஜெரோம் பவுல் இந்த பதவியில் இருந்தார். அவருக்குப் பதிலாக டிரம்ப் நியமித்த கெவின் வார்ஷ் இந்த பதவிக்கு வந்த பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். டிரம்ப் நியமித்த நபர் என்பதால் அவரது தலைமையில் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் இது உலகெங்கும் உற்று நோக்கப்படுகிறது. ஃபெட் முக்கியமாக வட்டி விகிதத்தை ) தீர்மானிக்கிறது. இந்த விகிதம் அதிகமாக இருந்தால் கடன் வாங்குவது விலை உயரும், பணவீக்கம் குறையும். விகிதம் குறைவாக இருந்தால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் ஆனால் பணவீக்கம் அதிகரிக்கலாம்.
மாற்றம் இருக்குமா?
பல பொருளாதார நிபுணர்கள் இந்த மீட்டிங்கில் வட்டி விகிதத்தில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் கெவின் வார்ஷின் முதல் மீட்டிங் என்பதால் அவரது பேச்சு மற்றும் எதிர்கால திட்டங்கள் முக்கியமாகக் கவனிக்கப்படும். பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பணவீக்கம் ஆகியவற்றைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும். உலக அளவில் பல நாடுகள் இந்த முடிவை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. ஏனென்றால் அமெரிக்க வட்டி விகித மாற்றம் சர்வதேச கரன்சி மதிப்பு, பங்குச் சந்தை மற்றும் தங்கம் விலை உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் உலக எண்ணெய் சந்தையை பெரிதும் மாற்றும். இந்த அமைதி ஒப்பந்தம் காரணமாக எண்ணெய் விலை குறைவதால் அமெரிக்காவில் பணவீக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. இது ஃபெட்-ஐ வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவை எடுக்க வைக்கலாம்.. மறுபுறம், அமைதி ஒப்பந்தம் மத்திய கிழக்குப் பகுதியில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரும். இது உலக பொருளாதாரத்துக்கு நல்ல செய்தி.
என்ன நடக்கும்!
எல்லாவற்றையும் விட பெட் முடிவு தங்கம் விலையை நேரடியாகப் பாதிக்கும். தங்கம் பொதுவாக பாதுகாப்பான முதலீடு என்று கருதப்படுகிறது. வட்டி விகித மாற்றங்கள் தங்கம் விலையை நேரடியாகப் பாதிக்கின்றன.
அதாவது வட்டி விகிதத்தை ஏற்றவும் செய்யாமல் இறக்கவும் செய்யாமல் நிலையாக வைத்திருக்க அமெரிக்க பெடரல் வங்கி முடிவு செய்தால்.. பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை முதலீட்டாளர்கள் உணரலாம். அப்போது தங்கம் விலை நிலையானதாக அல்லது சற்று உயரும். ஏனென்றால் மக்கள் பாதுகாப்பான முதலீட்டை நோக்கிச் செல்லலாம்.
விலை உயரவும் வாய்ப்பு இருக்கு
வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால்.. அது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஃபெட் எடுக்கும் வலுவான நடவடிக்கையாகக் கருதப்படும். அப்போது டாலர் வலுவடையும். தங்கம் விலை குறையும். ஏனென்றால் உயர் வட்டி விகிதத்தில் மக்கள் பங்கு, பத்திரம் போன்றவற்றை விரும்புவார்கள். தங்கம் வைத்திருப்பது விலை உயர்ந்ததாகிவிடும். அதேநேரம் வட்டி விகிதத்தைக் குறைப்பது என்பது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க எடுக்கப்படும் நடவடிக்கை. அப்போது டாலர் பலவீனமடையும். தங்கம் விலை உயரும். ஏனென்றால் குறைந்த வட்டி விகிதத்தில் டாலர் மதிப்பு குறையும். மக்கள் தங்கத்தைப் பாதுகாப்பாகக் கருதி வாங்குவார்கள்.
அமெரிக்க ஃபெட்ரல் வங்கி என்பது உலகின் மிக சக்திவாய்ந்த மத்திய வங்கி. அதன் முடிவுகள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச் சந்தை, ரூபாய் மதிப்பு, தங்கம் விலை மற்றும் எண்ணெய் விலையை நேரடியாகப் பாதிக்கின்றன. கெவின் வார்ஷ் தலைமையிலான இந்த முதல் மீட்டிங் எதிர்கால ஃபெட் கொள்கையின் திசையைக் காட்டும். இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு அமெரிக்கா தனது வட்டி விகித முடிவை அறிவிக்கவுள்ளது.