இன்ஸ்டாகிராமில் உருகிய காதலியே கொலையாளியா? புனே கொலை வழக்கில் திருப்பம் | Pune Ketan Agarwal murder Shia Goyal arrest

Spread the love

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான கேத்தன், தனது குடும்பத்தின் ரியல் எஸ்டேட் வணிகத்தின் இயக்குநராக இருந்தார். லோகாகட் கோட்டையில் சுமார் 400 அடி பள்ளத்தில் விழுந்து அவர் உயிரிழந்தார். அப்போது, பலத்த காற்று வீசியதால் கோட்டைக்குச் சென்றிருந்தபோது கேத்தன் கால் தவறி விழுந்துவிட்டதாக அவரது வருங்கால மனைவி சியா, லோனாவாலா ஊரக காவல்துறையிடம் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், புனே ஊரக காவல்துறையின் தீவிரமான விசாரணையில் பல முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. காவல் கண்காணிப்பாளர் சந்தீப் சிங் கில் கூறுகையில், “சம்பவத்தின் சூழ்நிலைகள் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால், பல கோணங்களில் விசாரணையைத் தொடங்கினோம்,” என்றார். விசாரணையில், கேத்தனும் சியாவும், இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்யவிருந்தது தெரியவந்தது. இவர்களின் திருமணத்திற்காக ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையை முன்பதிவு செய்வது உட்பட இரு குடும்பத்தினரும் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

காவல்துறை விசாரணையின்படி, சியா கோயலுக்கு புனேவைச் சேர்ந்த 22 வயதான சேத்தன் பாபுலால் சௌத்ரி என்பவருடனும் தொடர்பு இருந்துள்ளது. அகர்வாலுடனான சியாவின் உறவில் சேத்தன் அதிருப்தி அடைந்ததாகவும், அவரைத் தனது காதலுக்கு ஒரு தடையாகக் கருதியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இருவரும் சேர்ந்து அகர்வாலை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியதாக காவல்துறை குற்றம் சாட்டுகிறது.

திட்டத்தின்படி, சியா கேத்தனை சாதாரணமாக வெளியே செல்வதாகக் கூறி லோகாகட் கோட்டைக்கு வரவழைத்துள்ளார். பின்னர், சேத்தனும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளார். இருவரும் சேர்ந்து கேத்தனைப் பின்புறமாகத் தள்ளி பள்ளத்தில் விழச் செய்து கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஒரு விபத்து போல சித்தரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கேத்தனின் தந்தை விஷால் அகர்வால் அளித்த புகாரின் பேரில், செவ்வாயன்று புனே ஊரக காவல்துறை சியா மற்றும் சேத்தன் இருவரையும் கைது செய்தது. உள்ளூர் குற்றப்பிரிவு சேத்தனைக் காவலில் எடுத்து விசாரித்தபோது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கொலை மற்றும் குற்றவியல் சதி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“விசாரணையின் போது, கோயலுக்கு மற்றொரு ஆணுடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. அகர்வாலைத் திருமணம் செய்ய கோயல் விரும்பவில்லை என்றும், சௌத்ரியுடனான தனது உறவுக்கு அவர் ஒரு தடையாக இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் நடந்த லோகாகட் கோட்டை, மராட்டியப் பேரரசை நிறுவிய சத்ரபதி சிவாஜி மகாராஜின் வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு முக்கிய இடமாகும். இது மகாராஷ்டிராவில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட 12 கோட்டைகளில் ஒன்றாகும். மலையேறுபவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே இது மிகவும் பிரபலமான இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *