அதிமுக குறித்து நேற்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், “கேபினட் அமைச்சர் பதவி கொடுத்தால் அதிமுகவை பாஜகவில் இணைக்கும் நிலைமையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ராஜ்ய சபா சீட் தந்தால் திமுகவில்கூட கட்சியை இணைக்கும் நிலையில் இருக்கிறார்.
அதிமுக தலைமையிடம் உறுதி இல்லை. கட்சித் தலைமை கைவிட்டதால் பலர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகின்றனர்” என்று பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி தருவது போல, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் அதிக வாக்குகள் ஏறத்தாழ ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் நம்பிக்கையைப் பெற்றவர் எடப்பாடி பழனிசாமி.
அந்த நம்பிக்கையை தமிழ்நாடு முழுவதும் பெறும் நாள் வெகு தொலைவிலே இல்லை.
விஜய் தம்பி தன் மீதே நம்பிக்கை இல்லாமல் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் ராஜினாமா செய்திருக்கிறார்.
எடப்பாடியார் தலைமையிலே உழைக்கிற விசுவாசத் தொண்டர்கள் ஒரு செங்கலை கூட மாற்ற விடமாட்டார்கள்.
பல கட்சி மாறிகள் இன்றைக்கு அதற்கு விளக்கம் கொடுக்கிறார்கள். மதுரையிலே கூட இந்த மாவட்டத்தினுடைய அமைச்சர் அவருக்கு தெரிந்த வரலாறைச் சொல்லி இருக்கிறார். ஆனால் அவரது வரலாறு மதுரை மக்களுக்கு தெரியும்.