ஈரோடு: கலெக்டர் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நபர்; போலீஸ் விசாரணை

Spread the love

ஈரோடு மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வருகிறார் கந்தசாமி. தமிழ்நாடு அரசின் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்றுள்ளார்.

அங்கு பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.‌

வாகன விபத்து

ஆய்வுகளை முடித்துக் கொண்டு, அரசு வாகனம் மூலம் சத்தியமங்கலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் வழியாக ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த‌ நிலையில், கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாளபாளையம் பிரிவு அருகே சண்முகம் என்ற நபர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

அப்போது, கோபியிலிருந்து வந்த மாவட்ட ஆட்சியரின் அரசு வாகனம், எதிர்பாராதவிதமாக சண்முகத்தின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு நிலைதடுமாறி சாலையில் விழுந்த சண்முகத்திற்கு தலையிலும் உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்களும், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரும் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சண்முகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த சண்முகம்
உயிரிழந்த சண்முகம்

இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், “ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோயில் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (50) என்பவர் இன்று காலை கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காகச் சென்றுள்ளார். அங்கு பணிகளை முடித்துவிட்டு அவர் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *