12 ராசிக்காரர்களுக்கும் சொந்த வீடு யோகம் எப்படி
மேஷம்:
இந்த ராசிக்காரர்கள், செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். செவ்வாய் பூமிக் காரகன் ஆவார். எனினும், இந்த ராசிக்காரர்களில் பெரும்பாலானோருக்கு 42 வயதுக்கு மேல் சொந்த வீடு யோகம் அமையும். ஒருவேளை, தசா புக்தியும் வலுவான பூர்வ புண்ணிய ஸ்தானமும் கைகொடுத்தால், அதற்கு முன்னதாகவே சொந்த வீடு அமைந்துவிடும். இவர்களுக்குச் செவ்வாய், சுக்கிரன், சந்திரன் ஆகியோரால் சொந்த வீடு அமைவதில் தடைகள் ஏற்படலாம்.
இந்த ராசியைச் சேர்ந்த அன்பர்கள், செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமான் கோயில்களுக்குச் சென்று, முருகனுக்கும் அங்காரகனுக்கும் நெய் தீபம் ஏற்றி வைத்து, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் முலம் சொந்த வீடு வாங்குவதில் இருக்கும் தடைகள் நீங்கும்.
ரிஷபம்:
சுக்ரனை ராசியதிபதியாகக் கொண்டவர்கள். இவர்களுக்கு, மனதுக்கேற்ற சொந்த வீடு எளிதில் வாய்த்துவிடும். எனினும், சிலருக்கு, அசுரகுருவான சுக்ரனின் நிலை பாதகத்தை உண்டு பண்ணலாம். வாழும் காலத்திலேயே வீட்டை விற்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே, இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கைத் துணைவர் பெயரில் வீடு வாங்கலாம். அதனால் யோகம் கூடிவரும்.
பெரும்பாலும் 30 வயது அல்லது அடுத்த மூன்று வருடங்களுக்குள் சொந்த வீடு கிடைக்க வாய்ப்பு உண்டு. இவர்கள், ஒருமுறை குடும்பத்துடன் அருகிலுள்ள பெருமாள் கோயிலில் வழிபட்டு அன்னதானம் செய்யலாம். சிவாலயங்களில் சூரியபகவானுக்குச் செம்பருத்தி மலர்களால் அர்ச்சனை செய்து, பசுவுக்குக் கோதுமை கொடுப்பதன் மூலம் சொந்த வீடு அமையும்.
மிதுனம்:
மிதுன ராசிக் காரர் களுக்குப் புதன் ராசியாதிபதி. இவர்களுக்கு வீடு அமைவது சற்றுக் காலதாமதமாகும். சொல்லப்போனால் இவர்களில் பலருக்கும் சொந்த வீடு வாங்குவதில் நாட்டம் அதிகம் இருக்காது. 45 வயதுக்கு மேல் சொந்த வீடு அமையும். மிதுன ராசியில் பிறந்தவர்கள் புதன்கிழமைகளில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி, நெய் தீபம் ஏற்றி, பச்சைப் பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குப் பிரசாதமாகக் கொடுக்கலாம். ஒருமுறை, குடும்பத்துடன் திருப்பதி பெருமாளை தரிசித்து வருவதால், சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைக்கும்.
கடகம்:
இந்த ராசிக்காரர்களில் பெரும் பாலானோர், பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளவர்கள். சொந்தமாக, சுய உழைப்பில் சொந்த வீடு வாங்கும் யோகம் 50 வயதை நெருங்கும் போது நிறைவேறலாம். விரைவில் சொந்த வீடு அமைய, சந்திரனைத் தலையில் சூடியிருக்கும் சிவபெருமானை வழிபட வேண்டும். அதேபோல் கடக ராசியில் பிறந்தவர்கள் சுக்கிர பகவானை வழிபடுவதும் விசேஷம். மேலும், பசு மாட்டுக்கு ஊறவைத்த மொச்சைப் பயறை உண்ணக் கொடுக்கவேண்டும். இவ்விதம் ஆறு வெள்ளிக்கிழமைகள் செய்து வந்தால், விரைவில் சொந்த வீடு அமையும் என்பார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு, சொந்த வீடு விஷயத்தில் பூர்வபுண்ணிய பலன் அதிகம் உண்டு என்பார்கள். இவர்களில் சிலருக்கு, பிறக்கும் போதே சொந்த வீடு அமைப்பு இருக்கும். இல்லையென்றாலும் வாழ்க்கைத் துணை வர் வழியில் சொந்த வீடு அமையலாம். சொந்த உழைப்பில் வீடு வாங்கவேண்டும் எனில், 60 வயதுக்குமேல் அமையும். அதன் பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்கும் யோகமும் கைகூடும். இவர்கள், செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி அல்லது கிருத்திகை நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளில் திருச்செந்தூர் – செந்திலாண்டவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம்.
கன்னி:
இந்த ராசிக்காரர்களில் பெரும்பாலானோர், கூட்டுக் குடும்பமாக வாழ்வார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தனிக்குடித்தனம் தனியே வீடு எனும் சிந்தனை இல்லாமல் இருப்பார்கள். ஒருவேளை, சொந்த வீடு வாங்க வேண்டும் நினைத்தால் 25 வயதுக்குமேல் எப்போது வேண்டுமானால் இவர்களால் சொந்த வீடு வாங்க இயலும். வியாழக் கிழமைகளில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சொந்த வீடு அமைவதில் ஏற்பட்டுள்ள தடைகள் விலகும்.