உதயநிதியின் அரசியல் ஆட்டம்… அடுத்த பதவி என்ன? – Kumudam

Spread the love

திரைப்படத் துறையில் ஆர்வம் காட்டிய உதயநிதி ஸ்டாலின் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக 2018 மார்ச்சில் தெரிவித்தார். 2019-ல் நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தல், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் ஆகியவற் றில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

ஒரு செங்கல்லைக் காண்பித்து, ‘இதுதான் மதுரை எய்ம்ஸ் கல்லூரி மற்றும் மருத்துவமனை’ என்று அவர் பேசியது வைரலானது. 2019 ஜூலை 7 ஆம் தேதி தி.மு.க. இளைஞரணிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. ஆனால், அவர் நியமிக்கப்பட்டார் என்பதுதான் உண்மை. 2021-ல் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரன், மு.க.ஸ்டாலினின் மகன், இளைஞர் அணிச் செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர், துணை முதல்வர், இப்போது எதிர்க்கட்சித் தலைவர்..! இவையே இவரது அடையாளங்கள்! இவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அன்பில் மகேஷ், திண்டுக்கல் ஐ.பெரியசாமி போன்ற அமைச்சர்கள் தீர்மானம் நிறைவேற்றியபோது, ‘இப்படியெல்லாம் தீர்மானம் நிறைவேற்றி, தலைவருக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத் தாதீர்கள்’ என்று உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். ஆனால், இவை எல்லாமே ‘பேசி வைத்துச் செய்தது’ என்ற விமர்சனம்தான் பரவலாக எழுந்தது.

சர்ச்சை பேச்சுகளுக்குச் சொந்தக்காரர் உதயநிதி. சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டும் என இவர் பேசியது இந்தியா முழுவதும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.  இந்தியாவின் பல்வேறுபட்ட நகரங்களிலிருந்து உதயநிதிமீது வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவற்றை விசாரித்து வருகிறது உச்ச நீதிமன்றம்.

எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி தேர்ந்தெடுக்கப்பட்டபோதுகூட, அவரைவிட மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் நேரு தங்கம் தென்னரசு போன்றவர்களில் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை ‘டம்மி முதல்வர்’ என்று அவர் விஜய்யை அழைப்பதை அவரது கட்சி நிர்வாகிகளே பெரிதாக ரசிக்கவில்லை! சட்டமன்றத் தேர்தலின் போது விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என்று யோசனை சொன்னதும் இதே உதயநிதிதான். “அவருடைய தவறான யோசனையால்தான் நாம் ஆட்சியை இழந்தோம்.

தி.மு.க தீய சக்தி, தீய சக்தி என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார், விஜய். அதற்கு நாம் பதில் சொல்லாதது பெரிய அரசியல் பிழை. அதன் பலனைத்தான் நாம் இப்போது அனுபவிக்கிறோம்” என்கிறார்கள் தி.மு.க. நிர்வாகிகள். 1942-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10-ஆம் தேதி, இளைஞர் கருணாநிதியால் ஒரு துண்டுப் பிரசுரமாகத் தொடங்கப்பட்டது ‘முரசொலி’. அது பின்னர் தி.மு.க. வின் பிரசாரப் பீரங்கியாகவே திகழ்ந்தது. சமீபத்தில் சென்ற அதன் 84-வது ஆண்டு தினத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது தி.மு.க. நிர்வாகி களின் ஆதங்கம். எதிர்க்கட்சித் தலைவரான பிறகும்கூட உதயநிதி ஸ்டாலின் அந்த அலுவலகம் பக்கம் மிக அபூர்வமாகத்தான் எட்டிப் பார்க்கிறாராம்.

ஒருவகையில் அவர் எதிர்க்கட்சித் தலைவராக அமர்த்தப்பட்டதும் நன்மைக்கே என்று தி.மு.க. சீனியர்கள் சிலர் நினைக்கிறார்கள். உதயநிதியின் உயிர்த்தோழரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்ற சிலரும் ஒதுங்கியிருந்து, உதயநிதியைக் களமாடவிட்டுக் கவனிக்கிறார்கள். ‘முதல்வர் ஜோசப் விஜய்யின் அதிரடியான அணுகுமுறைக்கு இவர் எந்த அளவுக்கு ஈடுகொடுக்கிறார் என்பதை நாடும் நாட்டு மக்களும் நன்றாகக் கவனிக்கட்டும். அதை வைத்தே, திமுகவின் தலைமைப் பதவிக்கு உயரும் தகுதி அவருக்கு இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும்’ என்பதுதான் இவர்களின் கணக்கு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *