நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரியில் சுகாதாரத்துறை சார்பில் ரத்த தான முகாம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவ, மாணவி்கள் பங்கேற்று ரத்த தானம் செய்துள்ளனர். இந்த ரத்த தான முகாமில் பங்கெடுத்த மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கட்டுபாட்டில் இயங்கும் “மேரா யுவ பாரத்’ அமைப்பை சேர்ந்த ஒருவர், ரத்த தான முகாமில் பங்கேற்ற மாணவர்களிடம் தனியாக படிவம் வழங்கி அதில் பெயர், வயது, பயிலும் பட்டப்படிப்பு, சாதி, தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை எழுதி வாங்கியுள்ளார்.

ரத்தம் வழங்கியவர்களிடம் சாதி குறித்த விவரங்களை கேட்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சில மாணவர்கள் சாதி குறித்த விவரங்களை தர மறுத்ததுடன் ரத்ததையும் தானமாக வழங்குவதை தவிர்த்து வெளியேறியுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து ஆதாரங்களுடன் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.