International
oi-Nantha Kumar R
டாக்கா: நம் அண்டை நாடான வங்கதேசம் நம்மிடம் மோதலை கடைப்பிடித்து வரும் சூழலில் அந்த நாடு இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் தினமும் 8-10 மணி நேரம் மின்தடை ஏற்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாவதால் பொதுமக்கள் ஆங்காங்கே மின்வாரிய கட்டமைப்புகளை அடித்து நொறுக்குவதோடு, அதிகாரிகளை தாக்க தொடங்கி உள்ளனர். இதனால் நம் நாட்டிடம் வங்கதேசம் உதவி கோரியுள்ளது. வங்கதேசத்தின் இந்த திடீர் மின்தடை பிரச்சனைக்கு என்ன காரணம்? பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
வங்கதேசத்தின் பிரதமராக அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசீனா இருந்த வரை நம் நாட்டுக்கும், அந்த நாட்டுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. ஆனால் வங்கதேசத்தில் உள்நாட்டு வன்முறை வெடித்து ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்ததால் அங்கு அமைந்த இடைக்கால அரசு நம்மை எதிர்க்க தொடங்கியது. இப்போது வங்கதேசத்தில் பிஎன்பி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. பிரதமராக தாரிக் ரஹ்மான் உள்ளார். இவரது அரசும் ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தான் வங்கதேசம் தற்போது பெரிய சிக்கலை எதிர்கொள்ள தொடங்கி உள்ளதுது. அந்த நாட்டில் கடும் மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தினமும் 9 மணி நேரம் முதல் 10 மணிநேரம் வரை மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தலைநகர் டாக்காவை தவிர்த்து பிற இடங்களில் உள்ள கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மின்வெட்டால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சில இடங்களில் மின்வாரிய அலுவலகம், கட்டமைப்புகள் மீது தாக்குதலை தொடங்கி உள்ளனர். சைத்பூர், நில்பாமாரி, குஷ்டியா உள்ளிட்ட இடங்களில் மின்வாரிய கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நெட்ரோகோனா பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்வாரியத்தின் கட்டமைப்புகளை பாதுகாக்க போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டள்ளது. இரவு நேர கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்தட்டுப்பாட்டை சமாளிக்க வங்கதேச அரசு ஷாப்பிங் மால், கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றை சீக்கிரமாக மூட உத்தரவிட்டுள்ளது. இரவு 8 மணிக்கு மேல் ஷாப்பிங் மால், கடைகள் செயல்பட கூடாது. மின்சாரத்தை சேமிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகர்களும, வியாபாரிகளும் அதிருப்தியடைந்துள்ளனர். குறிப்பாக வங்கதேசத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வரும் ஜவுளித்துறையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளத.
வங்கதேசத்தில் திடீரென்று மின்தட்டுப்பாடு ஏற்பட சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதாவது வங்கதேசத்தில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் அந்த நாட்டில் மின்தேவை அதிகரித்துள்ளது. நாட்டில் 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் அங்கு 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூட விநியோகம் செய்ய முடியவில்லை. இதனால் தான் மின்வெட்டு அதிகரித்துள்ளது. அதேபோல் வெளிநாட்டில் வரும் மின்சார அளவும் சரிந்துள்ளது.
அதுமட்டுமின்றி இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி தான் வங்கதேசத்தில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. வங்கதேசத்தில் மின்சார தயாரிப்புக்கு தினமும் 1 Billion Cubic Feet என்ற அளவை விட அதிகமான இயற்கை எரிவாயு ேவையாக உள்ளது. ஆனால் தற்போது 700 மில்லியன் கியூபிக் பீட் அளவில் தான் இயற்கை எரிவாயு உள்ளது. தற்போது வங்கதேசத்துக்கான எல்என்ஜி சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்துக்கு எல்என்ஜி சப்ளை வழங்கும் அமெரிக்க நிறவனத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கடலில் நிலவும் மோசமான வானிலையால் 2 எல்என்ஜி கப்பல்கள் வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்டவை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தான் வங்கதேசம் நம் நாட்டிடம் உதவி கோரியுள்ளது. வங்கதேசத்தில் மின்தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் கூடுதலாக டீசல் வழங்கும்படி வங்கதேசம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான வங்கதேச தூதர் தினேஷ் திரிவேதியிடம் இதற்கான கோரிக்கையை அந்த நாட்டின் மின்சாரத்துறை அமைச்சர் இக்பால் ஹாசன் முகமது வைத்துள்ளார். இதுபற்றி இக்பால் ஹாசன் முகமது கூறுகையில், ”இந்தியா – வங்கதேசம் இடையே டீசல் சப்ளைக்கு பைப்லைன் உள்ளது. இதன் வழியாக கூடுதலாக டீசல் கோரியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
