
கவிஞர் முத்துலிங்கம்
கல்வியிற் சிறந்தவன் கம்பன். திரைப்படக் கவிதையிற் சிறந்தவன் கண்ணதாசன். ஆர்மோனியப் பெட்டிக்கு அழகுத் தமிழை அறிமுகப்படுத்திய பெருமை ஒரு கவிஞருக்கு உண்டெனில், அது கண்ணதாசனுக்குத்தான் உண்டு. ‘மதுரையிலிருந்த மாணிக்கத் தமிழைக் கோடம்பாக்கத்திற்குக் கூட்டி வந்தவன் கண்ணதாசன்’ என்று அண்ணன் வாலி ஒருமுறை கூறினார். அப்படி அவர் கூறுவதற்கு முன்பே ஒரு கவியரங்கத்தில் கண்ணதாசனை வைத்துக்கொண்டே, “தென்பழனிக்குத் தெற்கே திகழ்ந்த செந்தமிழை வடபழனிப் பக்கம் வரவைத்தவன் கண்ணதாசன்!” என்று நான் பாடினேன்.
திரைத்துறையில் காகிதப் பூக்களுக்கு நடுவே காட்டு ரோஜாவாகப் பரிமளித்தவர் கண்ணதாசன். கதம்ப மலர்களுக்கு நடுவே மல்லிகைப் பூவாக மணம் பரப்பியவர் அவர். திரைக் கவிஞர்கள் என்ற சிற்றோடைகளுக்கு மத்தியில் ஜீவ நதியாகப் பெருக்கெடுத்து ஓடியவர்!
கண்ணதாசனுக்குப் பிறகு எத்தனையோ கவிஞர்கள் திரைத்துறைக்கு வந்ததுண்டு; எனினும், கண்ணதாசனைப் போல் தந்ததுண்டா என்றால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இன்று துட்டுக்குப் பாட்டுரைப்போர் தொகை பெருகியிருந்தாலும், மெட்டுக்குப் பாட்டெழுதும் மேலோரில் கண்ணதாசன் தொட்ட இடத்தை இதுவரை யாரும் தொட்டதில்லை. சூரிய விட்டத்தைத் விட்டில்களால் ஆகுமா என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.
இலக்கியங்களின் சாற்றைப் பிழிந்து பாடலாக்கிக் கொடுத்தவர் கண்ணதாசன். இலக்கியப் புலவர்கள் சொல்லாமல் விட்ட நுட்பமான கருத்துகளைக்கூடத் திரைப் பாட்டில் சொன்னவர்.
‘ஆலயமணி’ படத்தில் ஒரு பாட்டு.
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
இது கண்ணதாசன் பாட்டு. இதை எதிலிருந்து எடுத்தார்? அருணகிரிநாதரின் திருப்புகழுக்கு ஒரு புலவர் சாற்றுக்கவி கொடுத்திருந்தார். அந்தப் புலவர் பெயர் இதுவரை யாருக்கும் தெரியாது. அந்த சாற்றுக்கவி ஒரு நேரிசை வெண்பா.
‘எல்லாரும் ஞானத் தெளிஞரே கேளீர்சொல்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோபொல்லாக்
கருப்புகழைக் கேட்குமோ கானமயில் வீரன்
திருப்புகழைக் கேட்கும் செவி.
இதிலிருந்து தான் உயிலும் எடுத்தார். இலக்கியப் புலவர்கள் கண்ணதாசனை விரும்பியதற்கு இதுவும் காரணம். பாமரனுக்கு விளங்காத வேதாந்த, சித்தாந்தக் கருத்துக்களைக்கூட எளிய தமிழில் எல்லோருக்கும் விளங்கும்படி திரைப்பாட்டில் தந்தவர் இவர். ஏனைய கவிஞர்களெல்லாம் திரைப்பாடலோடு நின்றுவிட்டார்கள். கண்ணதாசன் ஒருவர்தான் திரைப்பாடலோடு, கவிதை, கட்டுரை, புதினம், பத்திரிகை, அரசியல், ஆன்மிகம், மேடைச் சொற்பொழிவு எனப் பல துறைகளிலும் காலூன்றி வியாபித்திருந்தார்.
இதனால் அந்தந்தத் துறையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ‘கண்ணதாசன்… கண்ணதாசன்’ என்று சொல்லப்போக, மற்றைய கவிஞர்களின் பெயரைவிட கண்ணதாசன் பெயர் மேலோங்கி நிற்கிறது. அமங்கலமான பாடல்களைக்கூட மங்கலச் சொற்களில் எழுதுபவர் கண்ணதாசன். அறச்சொல் அவர் பாடலில் வராது. எம்.ஜி.ஆர். படத்தில் நான் எழுதிய பாடலொன்றில் அறச்சொல் வந்துவிட்டது. உடனே எம்.ஜி.ஆர். “இதைப் போன்ற சொற்கள் பாடலில் வரக்கூடாது. கண்ணதாசன் இதில் கவனமாக இருப்பார்” என்றார். அதன்பிறகு நான் எழுதியதுதான் ‘அன்புக்கு நானடிமை, தமிழ்ப் பண்புக்கு நானடிமை’ என்ற பாடல்.
ஆரம்பக் காலத்தில் மெட்டுக்குப் பாட்டெழுத கண்ணதாசன் மிகவும் சிரமப்பட்டார். இவர் திரையுலகில் நுழைந்த காலத்தில் விரைவாக மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் கேபி காமாட்சிசுந்தரம். கம்பதாசன், மருதகாசி போன்றவர்கள் சிறப்புப் பெற்றவர்களாக இருந்தார்கள். கண்ணதாசன் பயிற்சியாலும், முயற்சியாலும் பின்னாளில் இவர்களை வெற்றிகொண்டார்.
உவமையழகும் கற்பனையழகும் எங்கே ஒன்று கலக்கின்றதோ. அந்த இடம்தான் கவிதை நயமுள்ள இடம்! இதற்கும் அவரின் பாடல்களில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.தலைவியிடம் தோழி கேட்பாள். ‘உன் காதலன் நேற்று உன்னைப் பார்க்க வந்தானே, ஏதாவது சொன்னானா அல்லது ஏதாவது செய்தானா? என்று. அதற்கு இவள் பாட்டிலேயே பதில் சொல்வாள்.
‘கூடி வரும் மேகமென்று கூந்தலைத் தொட்டான் குவளைபோல் இருக்குதென்று கண்களைத் தொட்டான் உண்ணுகின்ற கனிகளென்று கன்னத்தைத் தொட்டான் தொட்டால் ஒடியுமென்று இடையை மட்டும்
தொடாமல் விட்டான்! என்பாள்.
இதில் கடைசி வரிதான் கவிதை நயமுள்ள வரி.
கவிதையில் மட்டுமல்ல, உரைநடையிலும் புதிய நடையைக் காட்டியவர், கண்ணதாசன். இவரது உரைநடை சிறுசிறு வாக்கியங்களாக இருக்கும். அதையே சீர் பிரித்து எழுதினால் அகவற்பா’ போலே திகழும்.
இவரது வனவாசமே அதற்கு எடுத்துக்காட்டு. வனவாசத்திற்கீடான உரைநடை இலக்கியம், உலக இலக்கியங்கள் எதிலும் இல்லையென்று சொல்வேன். ‘வனவாசம்’தான் உண்மையான புதுக்கவிதையின் தொடக்கம் என்பது என் கருத்து. கவிஞர்களைப் பாராட்டும் பண்பு கண்ணதாசனிடம் அதிகம் உண்டு. எம்.ஜி.ஆர். படம் ஒன்றில் நான் எழுதிய ‘தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து என்ற பாடலை, வாஹினி ஸ்டுடியோவில் என்னைப் பார்த்தபோது, பாராட்டிப் பேசினார்.
கிழக்கே போகும் ரயில் படத்தில் நான் எழுதிய ‘மாஞ்சோலைக் கிளிதானோ, மான்தானோ’ பாடலைக் கண்ணதாசன் எழுதியதாக நினைத்துக் கொண்டு, ‘இதைப் போல் ஒரு பாடலை நீங்கள் எங்களுக்கு எழுத வேண்டும்” என்று ஆர்.ஆர். பிக்சர்ஸ் அதிபர் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா, கண்ணதாசனிடம் கேட்டாராம். “அது நான் எழுதியதல்ல, முத்துலிங்கம் எழுதிய பாடல். சந்தங்களெல்லாம் நன்றாக எழுதுவார். அவரையே நீங்கள் பாடல் எழுதச் சொல்லலாம்” என்று சொன்னவர், கண்ணதாசன்.
எல்லாத் துறையிலும் வெற்றி பெற்ற கண்ணதாசன் தோற்ற இடம் அரசியல்தான். நெப்போலியனுக்கு வாட்டர்லூ போல, கண்ணதாசனுக்கு அரசியல்தான் வாட்டர் லூவாக இருந்தது. அரசியல்வாதிகளுக்குத் தேவையான சாமர்த்தியம், நிதானம், பொறுமை கண்ணதாசனிடம் இருந்ததில்லை.
“சிலுவையிலே அடியுண்டு ஏசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் ராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்
பார்மீது நான்சாகா திருப்பேன் கண்டீர்” என்றார் பாரதி,
அதைப் போல கண்ணதாசனும், “மானிட இனத்தை ஆட்டி
வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதைப் பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”
என்று பாடினார். அது உண்மைதான். கண்ணதாசனைப் போன்ற கவிஞர்களுக்கு என்றும் மரணமில்லை. தென்றல் இருக்கும்வரை, தேன்தமிழ் இருக்கும் வரை கண்ணதாசன் பாடல்களைப் போலே அவர் பெயரும் மக்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும். வாழ்க, கண்ணதாசன் திருப்புகழ்!
படங்கள் உதவி: ஞானம்