சூர்யாவின் “சீன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஜித்து மாதவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தில் வரும் ‘உனக்கே நிழலானேன்’ என்ற பாடலைப் பின்னணிப் பாடகர் விஜய் நரேன் பாடியிருக்கிறார்.
‘ஏய் சுழலி’, ‘போறேன் நான் போறேன்’ போன்ற பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இவர். ‘சீன்’ படத்திற்கு வாழ்த்து சொல்லி அவரைப் பேட்டி கண்டோம்.
நம்மிடையே பேசியவர், “நான் பிளேபேக் சிங்கராகக் கரியரைத் தொடங்கிய காலத்திலிருந்தே, அதாவது எனது கல்லூரி நாட்களில் இருந்தே சூர்யா சாருக்கு ஒரு பாடலாவது பாட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது.
ஏனெனில், அவரது காதல் பாடல்களில் இருக்கும் உணர்ச்சிகளை அவரைப்போல வேறு யாராலும் வெளிப்படுத்த முடியாது. இன்றைக்கு அந்த ஆசை முழுமையாக நிறைவேறியிருக்கிறது என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்.
எனக்கு இதற்கு முன்பாகத் தீபாவளி ரிலீஸாக வெளியான படம் என்றால் அது ‘கொடி’ படத்தில் வரும் ‘இயேசுவே’ பாடல்தான். அதன்பிறகு இப்போதுதான் எனது பாடல் இடம்பெறும் படம், தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாகிறது” என்றவர், “‘சீன்’ படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் ‘உனக்கே நிழலானேன்’ பாடலை நான் மேடையில் பாடியபோது ரசிகர்களிடமிருந்து கிடைத்த அன்பு அளப்பரியது.