நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தெல்லாம் பேசியிருந்தார். குறிப்பாக மிசா குறித்து பேசும்போது ஸ்டாலினை மறைமுகமாக சைகை ஒன்றின் மூலம் சாடியிருந்தார்.

இது சமூக வலைதளங்களிலும் வைரலாகி பேசுபொருளானது. தொடர்ந்து முதல்வரின் பேச்சில் ஆட்சேபத்துக்குரியவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுகவினர் கடும் அமளியிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முதல்வர் விஜய் தான் செய்த சைகை குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.