2029-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் சுமார் 10 லட்சம் மாணவர்களை தனது கல்வி முயற்சிகள் மூலம் சென்றடைய அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு பிரிவாக செயல்பட்டு வரும் அசோக் லேலண்ட் அறக்கட்டளையானது திட்டமிட்டுள்ளது. அதேசமயம், ஆண்டுதோறும் செலவிடப்படும் CSR நிதியையும் ₹40 கோடியிலிருந்து ₹60 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
அஷோக் லேலண்ட் பவுண்டேஷன் தனது முக்கியமான சமூகப் பொறுப்பு (CSR) முயற்சியாக ‘ரோடு டு ஸ்கூல்’( Road to School ) திட்டத்தின் கீழ் ஒரு முக்கிய முன்னேற்றத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அஷோக் லேலண்ட் பவுண்டேஷன் இயக்குநர் என். வி. பாலச்சந்தர், அஷோக் லேலண்ட் பவுண்டேஷன் தலைமை செயல் அதிகாரி டி. சசிகுமார் ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள அசோக் லேலண்ட் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அறக்கட்டளையின் இயக்குநர் என்.வி. பாலச்சந்தர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அறக்கட்டளையின் முக்கியத் திட்டங்களான “ரோடு டு ஸ்கூல்” (Road to School – RTS) மற்றும் “ரோடு டு லைவ்லிஹுட்” (Road to Livelihood – RTL) ஆகியவற்றை ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட புதிய மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்தார். நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே இந்த விரிவாக்கத்தின் நோக்கமாகும்.
தற்போது இந்த இரண்டு திட்டங்களும் ஒன்பது மாநிலங்களில் உள்ள 25 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. சுமார் 4,500 கிராமங்களில் அமைந்துள்ள 4,585 அரசு பள்ளிகளில் பயிலும் 6.3 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டங்கள் அனைத்தும் சமக்ரா சிக்ஷா அபியான் (Samagra Shiksha Abhiyan) மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகின்றன என்று பாலச்சந்தர் தெரிவித்தார்.
2025-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரோடு டு ஸ்கூல் (RTS) திட்டம், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அடிப்படை வாசிப்புத் திறன் மற்றும் எண்ணறிவு திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ரோடு டு லைவ்லிஹுட் (RTL) திட்டம், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த திறன்கள், நடைமுறை அறிவு மற்றும் வேலைவாய்ப்புத் திறன்களை வளர்க்கும் பயிற்சிகளை வழங்குகிறது.
இந்தத் திட்டங்களின் தாக்கத்தை விளக்கி அறக்கட்டளையின் தலைமை செயல் அலுவலர் டி. சசிகுமார், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார். சுமார் 40,000 மக்கள் வசிக்கும் இந்தத் தொலைதூர பழங்குடியினர் பகுதியில், 95 சதவீத மக்கள் பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள்.

273 குடியிருப்புகளைக் கொண்ட இந்தப் பகுதியில் உயர்கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருப்பதால் கல்வி வளர்ச்சியில் நீண்டகால சவால்கள் நிலவி வந்தன. ஆனால் தற்சமயம் கொல்லிமலைப் பகுதியில் உள்ள 58 அரசு பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள 3,515 பழங்குடியினர் மாணவர்களுக்கு RTS திட்டம் உதவி செய்து வருகிறது. இதற்காக 48 களப்பணியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்தத் திட்டத்தின் மூலம் கற்றல் திறன்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சசிகுமார் தெரிவித்தார். 5,750-க்கும் மேற்பட்ட எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்சிப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், 3,165-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோடைக்கால முகாம்களில் பங்கேற்றுள்ளனர். 373 மாணவர்கள் டேப்லெட் அடிப்படையிலான கற்றல் திட்டங்களின் பயனையும் பெற்றுள்ளனர்.
கல்வி வாய்ப்புகள் குறைவாக உள்ள சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதோடு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான புதிய பாதைகளை உருவாக்கும் நோக்கில் தனது கல்வித் திட்டங்களை விரிவுபடுத்தி, அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.















