பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 23-வது இந்தியா – ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் இந்தியாவின் பாரம்பரியக் கலை மற்றும் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையிலான தனித்துவமான பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார். கூஜா, ஓவியம், பட்டுத் துணி, கம்பளம், வெள்ளி வேலைப்பாடுகள் கொண்ட பொருட்கள் என ஒவ்வொன்றும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களின் கைவினைக் கலை மற்றும் பண்பாட்டுப் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
இந்தியா – ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு பிரதமர் மோடி இந்த நினைவுப் பரிசுகளை வழங்கியுள்ளார். பரிசுப் பொருட்கள் குறித்த புகைப்படங்களும், அவற்றின் பின்னணியில் உள்ள பாரம்பரியக் கலைகள் பற்றிய தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன.
ஒவ்வொரு பரிசுப் பொருளும் ஒரு மாநிலத்தின் தனித்துவமான கைவினைத் திறனையும், பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் கலை மரபுகளையும் எடுத்துக்காட்டுகின்றன. அந்த வகையில், பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பார்க்கலாம்.
1)ஆஸ்திரேலிய பிரதமருக்கு ராஜஸ்தானின் நீல மட்பாண்டக் கலை!
ஆஸ்திரேலிய பிரதமருக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் ப்ளூ பாட்டரி (Jaipur Blue Pottery) கைவினைப் பொருளை பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார்.
பொதுவாக மட்பாண்டங்கள் களிமண்ணால் தயாரிக்கப்படும் நிலையில், இந்த நீல மட்பாண்டக் கலை குவார்ட்ஸ் அடிப்படையிலான கலவையைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதனால் மற்ற மட்பாண்டங்களைக் காட்டிலும் மிருதுவான, பளபளப்பான தோற்றத்தைப் பெறுகிறது.
வெள்ளை நிறப் பின்னணியில் அடர் நீல நிறத்தில் வரையப்படும் மலர்கள், பறவைகள், வடிவியல் ஓவியங்கள் மற்றும் அலங்கார வேலைப்பாடுகள் இந்தக் கலையின் தனிச்சிறப்பாகும். கைவினைக் கலைஞர்களின் கைகளால் உருவாக்கப்படும் இந்தப் பொருட்கள் ராஜஸ்தானின் பாரம்பரியக் கலையை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் அடையாளமாக விளங்குகின்றன.
2)ஜப்பான் பிரதமருக்கு ராயல் ப்ளூ பனாரஸ் பட்டுத் துணி!
ஜப்பான் பிரதமருக்கு ராயல் ப்ளூ நிறத்திலான பனாரஸ் கதான் பட்டுத் துணியை அழகிய சதெலி பெட்டியில் வைத்து பிரதமர் மோடி பரிசளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி பகுதியில் உருவாகும் பனாரஸ் பட்டுத் துணிகள் உலகப் புகழ்பெற்றவை. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் நெசவுக் கலையின் அடையாளமாக இவை திகழ்கின்றன.
நுணுக்கமான பட்டுநூல்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தத் துணியில் பாரம்பரிய வடிவங்கள் மற்றும் கலைநயமிக்க வேலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. ராயல் ப்ளூ நிறம் கண்ணியத்தையும், ஞானத்தையும், நல்லிணக்கத்தையும் குறிக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
3)அமெரிக்க அதிபருக்கு தங்க நிறத்தில் பிச்சுவாய் ஓவியம்!
அமெரிக்க அதிபருக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் நாத்வாரா பகுதியில் புகழ்பெற்ற பிச்சுவாய் (Pichwai) ஓவியத்தைப் பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார்.
துணியின் மீது வரையப்படும் பாரம்பரிய ஓவியக் கலையான பிச்சுவாய், நுணுக்கமான கலை வேலைப்பாடுகளுக்குப் பெயர் பெற்றது. இயற்கை வண்ணங்கள் மற்றும் தங்க நிற அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டு இந்த ஓவியங்கள் உருவாக்கப்படுகின்றன.
தாமரை மலர்கள், பசுக்கள், மரங்கள், இயற்கைக் காட்சிகள் மற்றும் அலங்கார எல்லைகள் போன்றவை இந்த ஓவியங்களில் இடம்பெறும் முக்கிய அம்சங்களாகும். குறிப்பாக, தங்க நிற வேலைப்பாடுகள் ஓவியத்திற்கு தனித்துவமான கம்பீரமான தோற்றத்தை வழங்குகின்றன.
4)வியட்நாம் பிரதமருக்கு பாரம்பரிய தோல் சுவர் அலங்காரம்!
வியட்நாம் பிரதமருக்கு இந்தியாவின் பாரம்பரிய தோல் கைவினைக் கலையில் உருவாக்கப்பட்ட சுவர் அலங்காரப் பொருளை மோடி பரிசளித்துள்ளார்.
இந்தியாவில் பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் தோல் கைவினைக் கலையில், பதப்படுத்தப்பட்ட தோலைப் பயன்படுத்தி பல்வேறு அலங்காரப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. தோலின் மீது நுணுக்கமான துளையிடுதல், புடைப்பு வேலைப்பாடுகள் மற்றும் வண்ண ஓவியங்கள் மூலம் அழகிய வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன.
மலர்கள், வடிவியல் அமைப்புகள் மற்றும் விலங்குகளின் உருவங்கள் போன்றவை இந்தக் கைவினைப் பொருட்களில் இடம்பெறுகின்றன. இயற்கை சாயங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த அலங்காரப் பொருட்கள் இந்தியாவின் நாட்டுப்புறக் கலை மரபை வெளிப்படுத்துகின்றன.
5)திமோர்-லெஸ்தே பிரதமருக்கு அகேட் கல் கிண்ணம்!
திமோர்-லெஸ்தே பிரதமருக்கு அகேட் (Agate) எனப்படும் அரிய வகை கல்லால் உருவாக்கப்பட்ட கிண்ணத்தை பிரதமர் மோடி பரிசளித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் கம்பாட் பகுதி அகேட் கற்களைப் பதப்படுத்துதல் மற்றும் செதுக்குதல் போன்ற கைவினைத் தொழில்களுக்குப் பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்றது.
இயற்கையாகவே பல்வேறு நிறங்கள் மற்றும் கோடுகளைக் கொண்ட இந்த அரிய வகைக் கற்களைத் திறமையான கலைஞர்கள் வெட்டி, செதுக்கி, மெருகூட்டி அழகிய பொருட்களாக உருவாக்குகின்றனர். ஒவ்வொரு கல்லிலும் இயற்கையான நிற அமைப்புகள் மாறுபடுவதால், ஒவ்வொரு கிண்ணமும் தனித்துவமானதாக இருக்கும்.
6)பிலிப்பைன்ஸ் அதிபரின் மனைவிக்கு பஷ்மினா சால்வை!
பிலிப்பைன்ஸ் அதிபரின் மனைவிக்கு காஷ்மீரின் புகழ்பெற்ற பஷ்மினா சால்வையை காகிதக் கூழால் செய்யப்பட்ட பாரம்பரியப் பெட்டியில் வைத்து பிரதமர் மோடி பரிசளித்துள்ளார்.
காஷ்மீரின் பாரம்பரியக் கைவினைக் கலையில் பஷ்மினா சால்வைக்கு முக்கிய இடமுண்டு. சாங்க்தாங்கி வகை ஆடுகளின் அடிப்பகுதியில் வளரும் மென்மையான கம்பளி இழைகளிலிருந்து இந்தச் சால்வைகள் தயாரிக்கப்படுகின்றன.
மிகவும் மென்மையான தன்மை, குறைந்த எடை, வெப்பத்தைத் தக்கவைக்கும் திறன் ஆகியவை பஷ்மினாவின் சிறப்பம்சங்களாகும்.
இதனுடன் வழங்கப்பட்ட காகிதக் கூழால் தயாரிக்கப்பட்ட பெட்டியும் தனித்துவமானது. பல அடுக்குகளாகக் காகிதங்களை இணைத்து உருவாக்கப்படும் இந்தப் பெட்டிகளில் கலைநயமிக்க மலர் ஓவியங்கள் மற்றும் வண்ண அலங்காரங்கள் கையால் வரையப்படுகின்றன. ஒரே பரிசில் காஷ்மீரின் இரண்டு பாரம்பரியக் கைவினைக் கலைகளையும் இணைத்துள்ளார் பிரதமர் மோடி.
7)தாய்லாந்து பிரதமருக்கு கட்ச் பகுதியின் ரோகன் ஓவியம்!
தாய்லாந்து பிரதமருக்கு குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் உருவாகும் ரோகன் (Rogan Art) ஓவியத்தை மோடி பரிசாக வழங்கியுள்ளார்.
பல நூற்றாண்டுகள் பழமையான இந்த ஓவியக் கலை, கட்ச் பகுதியின் நிரோனா கிராமத்தில் குறிப்பிட்ட சில கைவினைக் குடும்பங்களால் மட்டுமே தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஆமணக்கு எண்ணெயைக் காய்ச்சி அதனுடன் இயற்கை நிறமிகளைச் சேர்த்து அடர்த்தியான வண்ணக் கலவை தயாரிக்கப்படுகிறது. பின்னர் மெல்லிய உலோகக் கம்பியைப் பயன்படுத்தி துணியின் மீது கலைஞர்கள் கையாலேயே நுணுக்கமான வடிவங்களை உருவாக்குகின்றனர்.
இதில் ஒரு பக்கத்தில் வரையப்படும் வடிவத்தைத் துணியை மடிப்பதன் மூலம் மறுபக்கத்திற்கும் பிரதிபலிக்கச் செய்து சமச்சீரான ஓவியத்தை உருவாக்குவது இந்தக் கலையின் தனிச்சிறப்பாகும்.
8)பிலிப்பைன்ஸ் அதிபருக்கு காஷ்மீர் பட்டுக் கம்பளம்!
பிலிப்பைன்ஸ் அதிபருக்கு காஷ்மீரின் புகழ்பெற்ற கையால் முடிச்சிடப்பட்ட பட்டுக் கம்பளத்தைப் பிரதமர் மோடி பரிசளித்துள்ளார்.
மிக நுணுக்கமான பட்டுநூல்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தக் கம்பளங்கள், அவற்றின் மென்மை, பளபளப்பு மற்றும் கலைநயமிக்க வடிவமைப்புகளுக்குப் புகழ்பெற்றவை.
ஒரு கம்பளத்தை உருவாக்குவதற்கே ஆயிரக்கணக்கான முடிச்சுகள் கையால் இடப்படுகின்றன. சில கம்பளங்களை முழுமையாக உருவாக்குவதற்கு பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகலாம்.
காஷ்மீரின் இயற்கை அழகை பிரதிபலிக்கும் மலர் வடிவங்கள், சினார் இலைகள் மற்றும் வடிவியல் அலங்காரங்கள் இந்தக் கம்பளங்களில் இடம்பெறுகின்றன. தலைமுறை தலைமுறையாகக் காஷ்மீர் நெசவாளர்களால் பாதுகாக்கப்படும் இந்தக் கலை, அம்மாநிலத்தின் பாரம்பரிய அடையாளமாக விளங்குகிறது.
9)சிங்கப்பூர் பிரதமருக்கு கோண்ட் ஓவியம்!
சிங்கப்பூர் பிரதமருக்கு மத்திய இந்தியாவின் பழங்குடியின மக்களின் பாரம்பரியக் கலையான கோண்ட் ஓவியத்தை மோடி பரிசாக வழங்கியுள்ளார்.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் வாழும் கோண்ட் பழங்குடியின மக்களிடையே இந்த ஓவியக் கலை பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
புள்ளிகள், கோடுகள் மற்றும் பல்வேறு வண்ணங்களை இணைத்து மரங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கைக் காட்சிகள் ஓவியங்களாக உருவாக்கப்படுகின்றன. திருவிழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது வீடுகளை அலங்கரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இந்தக் கலை, தற்போது இந்தியாவின் முக்கியமான நாட்டுப்புற ஓவிய மரபுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
10)புருனே சுல்தானுக்கு பித்ரி வெள்ளி வேலைப்பாடுகள் கொண்ட பூஜாடி!
புருனே சுல்தானுக்கு கர்நாடக மாநிலத்தின் பீதர் பகுதியில் உருவாக்கப்படும் பித்ரிவேர் (Bidriware) வெள்ளி வேலைப்பாடுகள் கொண்ட பூஜாடியை பிரதமர் மோடி பரிசளித்துள்ளார்.
துத்தநாகம் மற்றும் தாமிரம் கலந்த உலோகத்தால் உருவாக்கப்படும் இந்தப் பொருட்களில் தூய வெள்ளியைக் கொண்டு நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.
முதலில் உலோகத்தின் மீது வடிவங்கள் செதுக்கப்பட்டு, பின்னர் அதில் வெள்ளிக் கம்பிகள் பதிக்கப்படுகின்றன. இறுதியாக மேற்கொள்ளப்படும் பிரத்யேகச் செயல்முறை மூலம் பொருளின் மேற்பரப்பு அடர் கருப்பு நிறத்தைப் பெறுகிறது. அதில் பதிக்கப்பட்ட வெள்ளி வேலைப்பாடுகள் தனியாகப் பளிச்சிடுகின்றன.
பீதர் கோட்டையின் கட்டிடக்கலை மற்றும் பாரம்பரிய வடிவமைப்புகளிலிருந்து இந்தக் கலைக்கான பல்வேறு அலங்கார வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புவிசார் குறியீடு (GI Tag) பெற்ற இந்தக் கைவினைக் கலை, கர்நாடகாவின் பாரம்பரிய உலோகக் கலைத்திறனை எடுத்துக்காட்டுகிறது.
11)மலேசிய பிரதமருக்கு வெள்ளி வேலைப்பாடுகள் கொண்ட உருளி!
மலேசிய பிரதமருக்கு வெள்ளி அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட பாரம்பரிய உருளியை மோடி பரிசாக வழங்கியுள்ளார்.
இந்திய வீடுகளில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் உருளி, தண்ணீர் நிரப்பி அதில் மலர்களை மிதக்கவிட்டு அலங்கரிப்பதற்குப் பயன்படுகிறது.
வெள்ளி வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட இந்த உருளி, அழகு மற்றும் கலைநயத்துடன் இந்தியப் பண்பாட்டின் விருந்தோம்பல் மரபையும் எடுத்துக்காட்டுகிறது. தூய்மை, செழிப்பு, நல்லிணக்கம் மற்றும் வளம் ஆகியவற்றின் அடையாளமாகவும் உருளி பார்க்கப்படுகிறது.
12)இந்தோனேசிய அதிபருக்கு சோழர் கால வெண்கலச் சிற்பம்!
இந்தோனேசிய அதிபருக்கு தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் சோழர் கால வெண்கலச் சிற்பத்தைப் பிரதமர் மோடி பரிசளித்துள்ளார்.
9-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரையிலான சோழர் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவில் வெண்கலச் சிற்பக் கலை உச்சத்தை எட்டியது.
மெழுகு அச்சு முறையில் உருவாக்கப்படும் இந்தச் சிற்பங்கள் ‘லாஸ்ட் வேக்ஸ்’ (Lost Wax Casting) எனப்படும் பாரம்பரியத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதில் ஒவ்வொரு சிற்பமும் தனித்தனியாகக் கையால் உருவாக்கப்படுவதால், ஒவ்வொன்றும் தனித்துவமான கலைப்படைப்பாக அமைகிறது.
இந்தியாவின் உலோகச் சிற்பக் கலையின் பெருமையையும், சோழர்களின் கலை மரபையும் உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்தப் பரிசு அமைந்துள்ளது.
13)லாவோஸ் பிரதமருக்கு ரோஸ் குவார்ட்ஸ் கல் யானை!
லாவோஸ் பிரதமருக்கு இளஞ்சிவப்பு நிற ரோஸ் குவார்ட்ஸ் கல்லால் செதுக்கப்பட்டு தங்க நிற வேலைப்பாடுகள் செய்யப்பட்ட யானைச் சிற்பத்தை மோடி பரிசாக வழங்கியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கற்களைச் செதுக்கும் கைவினைக் கலைஞர்கள் இதுபோன்ற அலங்காரப் பொருட்களை உருவாக்குவதில் புகழ்பெற்றவர்கள்.
இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்ட ரோஸ் குவார்ட்ஸ் கல்லைச் செதுக்கி மெருகூட்டி யானை வடிவமாக உருவாக்குகின்றனர். பின்னர் அதன் மீது மலர் வடிவங்கள் மற்றும் பாரம்பரிய அலங்காரங்களைத் தங்க நிறத்தில் வரைவதன் மூலம் அழகிய தோற்றம் அளிக்கப்படுகிறது.
14)மியான்மருக்கு பித்ரிவேர் வெள்ளி வேலைப்பாடுகள் கொண்ட பூஜாடி!
மியான்மருக்கும் கர்நாடக மாநிலத்தின் பீதர் பகுதியில் உருவாகும் பித்ரிவேர் வெள்ளி வேலைப்பாடுகள் கொண்ட பூஜாடியைப் பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
அடர் கருப்பு நிற உலோகத்தின் மீது வெள்ளியால் நுணுக்கமான வடிவங்கள் பதிக்கப்படுவது இந்தக் கலையின் முக்கியமான சிறப்பாகும். மலர் மற்றும் வடிவியல் அலங்காரங்கள் நிறைந்த இந்தப் பூஜாடி, பல தலைமுறைகளாகப் பாதுகாக்கப்படும் இந்திய உலோகக் கைவினை மரபின் அடையாளமாக விளங்குகிறது.
15)கம்போடியாவுக்கு டோக்ரா கலைப்படகுச் சிற்பம்!
கம்போடியாவுக்கு இந்தியாவின் பழமையான உலோகக் கைவினைக் கலையான டோக்ரா (Dokra) முறையில் உருவாக்கப்பட்ட படகுச் சிற்பத்தை மோடி பரிசளித்துள்ளார்.
சுமார் 4,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டதாகக் கருதப்படும் டோக்ரா கலை, மெழுகு அச்சு முறையை அடிப்படையாகக் கொண்டது.
முதலில் மெழுகைக் கொண்டு சிற்பத்தின் வடிவம் உருவாக்கப்பட்டு, அதன் மீது வார்ப்புப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பின்னர் உலோகத்தை ஊற்றி உருவாக்கப்படும் இந்தச் சிற்பங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான கைவினைப் படைப்புகளாக அமைகின்றன.
படகில் மனித உருவங்கள் மற்றும் பறவைகள் இடம்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பம், ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முன்னேற்றத்தை அடையாளப்படுத்துகிறது. இந்தியாவின் பழங்குடியின மற்றும் நாட்டுப்புறக் கலை மரபுகளையும் இந்தக் கலை பாதுகாத்து வருகிறது.
உலக நாடுகளுக்கு இந்தியாவின் கலாசார அடையாளம்!
பிரதமர் மோடி வழங்கிய இந்தப் பரிசுப் பொருட்களை உற்று நோக்கினால், ஒவ்வொன்றும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களின் தனித்துவமான கலை மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிப்பது தெளிவாகிறது. ராஜஸ்தானின் நீல மட்பாண்டக் கலை முதல் காஷ்மீரின் பஷ்மினா சால்வை வரை, குஜராத்தின் ரோகன் ஓவியம் முதல் தமிழ்நாட்டின் சோழர் கால வெண்கலச் சிற்பம் வரை இந்தியாவின் பாரம்பரியப் பெருமைகளை உலகத் தலைவர்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.
வெறும் நினைவுப் பரிசுகளாக மட்டுமின்றி, பல தலைமுறைகளாகக் கைவினைக் கலைஞர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியத் தொழில்களையும், இந்தியாவின் பண்பாட்டு அடையாளங்களையும் உலக அரங்கில் வெளிப்படுத்தும் முயற்சியாகவும் இந்தப் பரிசுகள் பார்க்கப்படுகின்றன.
ஒரு நாட்டின் கலாசாரத்தை மற்றொரு நாட்டிற்கு அறிமுகப்படுத்துவதில் இதுபோன்ற பரிசுப் பொருட்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி வழங்கிய இந்தப் பாரம்பரியப் பரிசுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.