திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நெய்க்காரப்பட்டியில், தாலுகா போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு சப்-இன்ஸ்பெக்டராக ராஜகோபால் (வயது 34) பணி செய்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு பழனி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் அடிதடி பிரச்னை தொடர்பாகப் புகார் அளிக்க போலீஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.
அங்கு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலைச் சந்தித்து பிரச்னை தொடர்பான புகாரை அளித்துள்ளார். அதைப் பெற்று கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், புகார் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது, விசாரணை தொடர்பாகப் பேச வேண்டும் எனக் கூறி புகார் அளித்த பெண்ணின் செல்போன் எண்ணை சப்-இன்ஸ்பெக்டர் வாங்கியுள்ளார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், அந்த இளம்பெண் செல்போனுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார்.

பின்பு அந்த இளம்பெண் தரப்பில், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. சசிமோகன், போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், துணை சூப்பிரண்டு தனஞ்செயன் ஆகியோருக்குப் புகார் அளிக்கப்பட்டது. பின்பு புகார் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், புகார் அளிக்க வந்த இளம்பெண்ணின் செல்போனில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியது உறுதியானது.
அதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் திண்டுக்கல் டி.ஐ.ஜி. சசிமோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தற்போது தென்மண்டல ஐ.ஜி., எஸ்.ஐ. ராஜகோபாலைப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.