மத்திய அரசைக் கண்டித்து சிஜேபி முன்னெடுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்து, உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக். அமைச்சரின் ராஜினாமாவைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், சோனம் வங்சுக் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில், “எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்பே எனது உண்ணாவிரதத்தை முடிக்க நாங்கள் பரிசீலித்தோம். அதற்காகவே ராகுல் காந்தியை தொடர்புகொள்ள அனைத்து வழிகளிலும் என் மனைவி கீதாஞ்சலி முயற்சி செய்தார். அவர் ராகுலுக்கு எதிரானவர் அல்ல. ஆனால் காங்கிரஸ் தரப்பிலிருந்து நேர்மறையான பதில் எதுவும் வரவில்லை.
காங்கிரஸ் தலைமை குறித்த எனது மனைவியின் கருத்துகள் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இந்தப் பின்னணியைப் புரிந்துகொள்வது மிக முக்கியம் எனக் கருதுகிறேன்.
ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர் தலைவர்கள் முன்னிலையில் உண்ணாவிரதத்தை நிறைவு செய்வதே எனது தொடக்க திட்டமாக இருந்தது. உண்ணாவிரதத்தை முடிக்க மத்திய அமைச்சர்கள் நள்ளிரவுக்குப் பிறகு வந்தபோது, `எனது அறிவிப்புக்கு முன் எந்தப் படங்களையும் வெளியிடக் கூடாது, எதிர்க்கட்சித் தலைவர்களின் படங்களுடன் எனது இந்தச் செய்தி வெளியிடப்படும்” என்று அவர்களிடம் சொன்னேன்.