India
oi-Hema Vandhana
நாக்பூர்: ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. இந்திய விமானப்படையில் (IAF) அதிகாரியாக பணியாற்றி வரும் ஒருவரின் 24 வயது இளம் மனைவியை, அவருடைய பழைய பள்ளித் தோழனே திட்டமிட்டு கடத்தி, மிரட்டி, பலாத்காரம் செய்து, கட்டாயமாக மதமாற்றம் செய்துள்ள கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டாலும், சம்பவ அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை. என்ன நடந்தது?
பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றம் சாட்டப்பட்ட 26 வயது அயாஸ் மதேரே என்பவரும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் சொத்துகளை விற்பனை செய்யும் டீலர்களாக (Real Estate Dealers) இருந்துள்ளனர். கடந்த 2025 பிப்ரவரி 8-ந்தேதி, அயாஸ் அந்தப் பெண்ணை நாக்பூரில் உள்ள வார்தா சாலையில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்துள்ளார்.

பழைய தோழியுடன் சந்திப்பு
அங்கு அந்தப் பெண் குடித்த பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவர் மயங்கிய நிலையில் ஆபாசமாக போட்டோக்களும் வீடியோக்களும் எடுத்துள்ளார். அதன் பிறகுதான் அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் நரகம் தொடங்கியது.
“நான் சொல்வதைக் கேட்காவிட்டால் இந்த வீடியோக்களை உன் கணவருக்கும், சமூக வலைத்தளங்களிலும் அனுப்பி விடுவேன்” என்று அயாஸ் மிரட்டத் தொடங்கினார். இந்த மிரட்டலுக்குப் பயந்து அந்தப் பெண், அவரிடம் 4 லட்சம் ரூபாய் வரை பணத்தைக் கொடுத்துள்ளார். ஆனாலும் அயாஸின் கொடூரம் அடங்கவில்லை. அந்தப் படங்களை காட்டி பலமுறை அந்தப் பெண்ணின் வீட்டுக்கே சென்று அவரைத் தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார்.
கையை விடு, என்னை விட்டுடு
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுதான் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாகவும் மாறியுள்ளது.
அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் அழுதுகொண்டே, “என் கையை விடு, என்னை விட்டுவிடு” என்று கதறுகிறார். ஆனால் அயாஸ் மதேரே, அந்தப் பெண்ணின் கைகளை பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு, ஏதேதோ வார்த்தைகளைச் சொல்லி அவர் முகத்தில் ஊதுகிறார்.
பிளாஸ்டிக் பாட்டிலில் மர்ம திரவம்
இதுகுறித்து அந்தப் பெண் போலீசாரிடம் கூறும்போது, “அயாஸ் எப்போதும் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஏதோ ஒரு மர்ம திரவத்தைக் கொண்டு வருவான். அதை என்னை கட்டாயப்படுத்தி குடிக்க வைப்பான். பிறகு ஏதேதோ வார்த்தைகளைக் கூறி, எனக்கு வசியமும், மாந்திரீகமும் செய்வது போல நடித்து, என் சுயநினைவை இழக்கச் செய்து பலாத்காரம் செய்வான்” என்று நெஞ்சை பதறவைக்கும் வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளார்.
கடந்த மே 31-ம் தேதி அயாஸ் மதேரே மற்றும் அவனுடைய நண்பன் அமீன் ஷேக் ஆகிய இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக கல்மேஷ்வர் என்ற பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கு மத்தியப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மதகுருவை வரவழைத்து, அந்தப் பெண்ணின் சம்மதம் இல்லாமலேயே, மிரட்டி, கட்டாயப்படுத்தி சட்டவிரோதமான முறையில் மதமாற்ற சடங்குகளைச் செய்துள்ளனர்.
திருமண ஒப்பந்தத்தம் – கையெழுத்து
மேலும், அந்தப் பெண்ணை அச்சுறுத்தி வலுக்கட்டாயமாக திருமண ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வைத்துள்ளனர். இதன் மூலம் அந்தப் பெண்ணுக்குத் தெரியாமலேயே சட்டவிரோதத் திருமணம் நடந்துவிட்டதாக அந்த மதகுரு அறிவித்துள்ளார். அதன் பிறகு அந்தப் பெண்ணை வற்புறுத்தி அவருக்குப் பிடிக்காத உணவுகளைச் சாப்பிட வைத்து, மீண்டும் ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்று அயாஸ் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்தக் கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் தன் கணவரிடம் கூற, இருவரும் நாக்பூர் நகரின் சோனேகாவன் (Sonegaon) போலீசில் புகார் அளித்தனர்.
போலீஸார் உடனடியாக செயல்பட்டு அயாஸ் மதேரே மற்றும் அவனுக்கு உதவிய அமீன் ஷேக் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது மகாராஷ்டிராவின் மாந்திரீக எதிர்ப்புச் சட்டம், பலாத்காரம், மிரட்டிப் பணம் பறித்தல், கட்டாய மதமாற்றம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நாக்பூர் துணை போலீஸ் கமிஷனர் ரிஷிகேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், தலைமறைவாக இருக்கும் ஹஸ்ரத் மௌலானாவை கைது செய்ய தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.