இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் , அ.தி.மு.க கரூர் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன்,
“அ.தி.மு.க கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர்கள் யாரும் அரசியலில் நீடித்ததில்லை. எம்.ஆர்.விஜயபாஸ்கர் அ.தி.மு.க தொண்டர்களின் மனநிலை அறியாமல், தனிச்சையாக செயல்பட்டார். தன் பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கியது முதல் மாவட்ட செயலாளர் பதவி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவி என அனைத்தையும் அ.தி.மு.க எனும் கட்சி மூலம் அனுபவித்து வந்தார்.
அதேபோல் அவர் , ஐந்தாண்டுகள் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது, அ.தி.மு.க எனும் கட்சி தேவைப்பட்டது. ஆனால், இன்று கரூர் அ.தி.மு.க கட்சி தொண்டர்கள் உழைப்பில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுவிட்டு, இப்போது ஆளும் கட்சியின் குதிரை பேரத்திற்கு துணையாக, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவர், இதே தொகுதியில் மீண்டும் கரூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கரூர் சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டால், அ.தி.மு.க தொண்டர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். த.வெ.க தலைவர் முதலமைச்சர் விஜய், சினிமா வசனத்தில் கூறுவதைப் போல, “ஐயம் வெயிட்டிங், நாங்களும் வெயிட்டிங்'” என்றார்.
இதனைத் தொடர்ந்து, கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையில் உள்ள அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கடந்த ஜூன் 3-ம் தேதி திறக்கப்பட்டது முதல் தினந்தோறும் அலுவலகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் நேற்று காலை முதலே திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருந்தது. கரூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சட்டமன்ற உறுப்பினர் பதவி ராஜினாமா செய்துள்ளதால் விரைவில் கரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராகியுள்ளது.
த.வெ.க கரூர் மேற்கு மாவட்டச் செயலாளராக உள்ள வி.பி.மதியழகன், த.வெ.க கூட்ட நெரிசல் சிபிஐ வழக்கில் அதிகம் பேசப்பட்டவர் என்பதால் அவருக்குத்தான் கரூர் இடைத்தேர்தலில் போட்டியிட தவெக தலைமை வாய்ப்பு வழங்கும் என சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மறுபுறம் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட தி.மு.க தொண்டர்கள் இம்முறை எப்படியாவது மீண்டும் கரூர் சட்டமன்ற தொகுதியை கைப்பற்றும் வேகத்தில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் த.வெ.க-வில் இணையும்பட்சத்தில் அவரும் சீட் கேட்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், த.வெ.க தலைமை யாருக்கு சீட் தரும் என்பது தெரியவில்லை. இதனால், கரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் பொழுது கடுமையான போட்டி இம்முறை இருக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே, த.வெ.க கட்சியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதாரவாளர்களுடன் வரும் 2 – ம் தேதி இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. கரூர் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம், கரூர் மாவட்ட அரசியலில் மட்டத்தில் அனலை கிளப்பியிருக்கிறது.