“எல்லாருக்கும் ‘Yes’ சொன்னேன்… ஆனா என் வாழ்க்கை இப்போ ‘No’ சொல்ல ஆரம்பிச்சுடுச்சு”- பேசும் மனசு – 6

Spread the love

 “நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து, நான் எப்போதும் நம்பிக்கைக்குரிய ஆளாக இருக்கவேண்டும் என்று நினைத்துதான் வேலை செய்து வருகிறேன். யாராவது உதவி கேட்டால், ‘பண்ணமுடியாது’ என்று சொல்ல எனக்கு மனது வராது. ‘நம்மால் முடிஞ்ச உதவிகளை செய்யலாம். நம்மால் முடியும்’ என்று நினைத்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொடுப்பேன். இதனால் என்னுடைய பெர்சனல் நேரம் குறைவது பற்றியயோ, வேலை அதிகரிப்பது பற்றியோ நான் கவலைப்பட்டது இல்லை. என்னுடைய இந்தக் குணம் எனக்கு நெகட்டிவாக மாற ஆரம்பித்திருப்பதை சமீப காலமாக உணர்கிறேன்.

பேசும் மனசு
பேசும் மனசு

என்னுடன் வேலை செய்யும் சக பணியாளர்கள் அவர்களின் வேலைகளையும் என்னிடம் தள்ளி விட ஆரம்பித்தார்கள்… ‘நீ தான் வேகமாக, நேர்த்தியாக முடிப்ப’னு சொல்லி, அவர்களுடைய பொறுப்புகளையும் என்னிடம் தருகிறார்கள்.மேனேஜர் கூட ‘நீ தான் சரியாக செஞ்சு முடிச்சு கொடுப்ப’ என்று எந்த வேலையாக இருந்தாலும் என்னை அணுகுகிறார். ஆரம்பத்தில் இது எனக்கான அங்கீகாரம் மாதிரியும், பாராட்டு மாதிரியும் தோன்றியது. ஆனால் இப்போது அது சுமையாக மாற ஆரம்பித்திருக்கிறது.

அதே போன்று வீட்டிலேயும் என்னால முடிந்த வேலைகளை மாமியாருக்காக செய்வேன். அவங்க வயசானவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்னு நினைச்சு இழுத்துப் போட்டு கிச்சன் வேலைகளைச் செய்துகொடுப்பேன். இப்போது வீட்டிலேயும் எந்த வேலையாக இருந்தாலும் ‘நீயே பண்ணிடு’னு சொல்லி எங்க மாமியார் ஒதுங்குறாங்க. ஆனா தனி வீட்டில் இருக்கும் என் கோ – சிஸ்டருக்கு மாவு அரைச்சு கொடுப்பதில் தொடங்கி சமைப்பது வரை எல்லா வேலைகளிலும் உதவுறாங்க.

Relationship
Relationship

என் மாமியார் என்ன வேலை சொன்னாலும் நான் செய்வேன். ட்யர்டாக இருந்தாலும் கூட என்னால் முடிந்த வேலைகளை செய்து கொடுப்பேன். ஒருநாள் கூட, ‘என்னால முடியாது’னு சொல்லி ஓய்வு எடுத்ததில்லை. ஆனா, இப்போ எனக்கு உடம்பும், மனசும் ரொம்ப டயர்டா இருக்கு. ஓய்வு தேவைப்படுது. இப்போ என்னால என்னையே புரிஞ்சுக்க முடியல…

நான் நல்லவளா இருக்க முயற்சி பண்ணுறேனா? இல்ல என்னை உழைப்புச் சுரண்டல் பண்ண நானே அனுமதிக்கிறேனா? என்னால எங்கேயும் ‘No’ சொல்ல முடியல. சொல்லணும்னு தெரியும்… ஆனா சொல்ல முடியல. நான், ‘ நோ’ சொன்னா என்னைப் பற்றி என்ன நினைப்பாங்கனு பயம். ‘இவ்ளோ நாளா நல்லவங்க மாதிரி இருந்தவங்க இப்போ மாறிட்டாங்க’னு சொல்லுவாங்கலோனு தயக்கம். சில நேரங்களில் குற்ற உணர்வாகவும் இருக்கிறது.

ஆனால், இது எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு பயணிக்கும்போது… நான் மெதுவாக என்னை இழக்க ஆரம்பிச்சிருக்கேன். எனக்கு ரெஸ்ட் இல்ல. ஓய்வு எடுக்க நேரம் இல்ல. சில நேரங்களில் ரொம்ப சின்ன விஷயத்துக்குக்கூட எரிச்சல் வருகிறது. எந்த வேலையுலேயும் ஈடுபாடு இல்ல. இன்னும் சில நேரங்களில் நான் ஓடி ஓடி ஹெல்ப்  பண்றதுக்கும், அடுத்தவங்களுக்காக விட்டுக் கொடுப்பதற்கும் மதிப்பு இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது.

Relationship ( Representational Image)

இப்போ எனக்கு ரொம்ப பெரிய குழப்பம் இருக்கு. எல்லாருக்கும் உதவுறது நல்லதா? இல்ல ‘No’ சொல்ல ஆரம்பிக்கணுமா? சொல்லணும்னா யாரையும் காயப்படுத்தாம எப்படி சொல்லுவது? நான் மாறினா, என்னை ஏற்றுக்கொள்வார்களா? இந்த நிலைமையில் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று வாசகி ஒருவர் விகடனுக்கு அனுப்பியிருந்தார்.

இது குறித்து உள்வியல் ஆலோசகர் ப்ரீனுவிடம் பேசினோம்.

“இந்த வாசகர் பகிர்ந்திருக்கும் சிக்கல், தனிப்பட்ட பிரச்னை போன்று தோன்றினாலும், உண்மையில் பலருக்கும் பொதுவாக இருக்கும் ஓர் உளவியல் சிக்கல் இது. நல்ல மனது, பிறருக்கு உதவும் குணம் இதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பு, மற்றவர்களுக்காக நாம் எவ்வளவு தூரம் இறங்கிப் போகலாம் என்ற எல்லைகளை தீர்மானிப்பது அவசியம். ‘நோ’ என்று சொல்ல முடியாமல் போவதற்கு குணநலன் மட்டும் காரணமாக இல்லை. அதன் பின்னால் சில முக்கியமான உளவியல் காரணங்கள் இருக்கும்.

ப்ரீனு

அங்கீகாரம் தேடும் மனநிலை:

நம்மை ‘நல்லவங்க’ என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தால், நாம் எல்லாருக்கும் “yes” சொல்ல ஆரம்பிப்போம். அந்த “yes” தான் மெதுவாக சுமையாக மாறும்.

குற்ற உணர்வு :

சின்ன வயதிலிருந்தே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் உதவி கேட்கும் போது இல்லையென்று சொல்லக்கூடாது என்பதைக் கற்று இருந்தால், ஒருவருக்கு ‘No’ சொல்லும் போது தானாகவே குற்ற உணர்வு வரும். அதனால் தான் ‘No’ சொல்ல வேண்டும் என்பது தெரிந்தாலும் இந்த வாசகியால் சொல்ல முடியவில்லை.

மாதிரி படம்

சமமில்லாமல் நடத்தப்படுகிறோம் என்ற உணர்வு:

ஆபீஸ்லேயும், வீட்டுலேயும் அதிகம் செய்யும் ஒருவருக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போனால், மனசுக்குள் ஒரு சமநிலையின்மை உருவாகும். ‘நான் இவ்வளவு செய்கிறேன்… ஆனா ஏன் மதிப்பு,மரியாதை கிடைக்கல?’ என்ற கேள்வி வரும். பின்னர் அது அழுத்தமாக மாறும்.

இந்த மூன்று காரணங்களும் சேரும்போது, வெளியில் பார்த்தால் நல்லவர் என்ற எண்ணம் பிறருக்கு தோன்றலாம். ஆனால் சம்பந்தப்பட்ட நபர் எப்போதும் ஒரு வித அழுத்தத்தில் இருக்க வேண்டியது இயல்பானது.

தீர்வு:

முதலில் ஒரு முக்கியமான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாருக்கும் உதவுவது நல்லது.ஆனால் நம்மை இழந்து உதவுவது சரி அல்ல. ஒருவருக்கு ஒரு இடத்தில் ‘No’ சொன்னால் நீங்கள் தவறானவர் ஆகமாட்டீர்கள். அது உங்கள் வரம்பை (boundary) காட்டும் ஒரு ஆரோக்கியமான சூழல். உங்களுக்கு நோ சொல்ல சிரமமாக இருந்தால், ‘இப்போது இதை செய்ய இயலாது… நான் ஏற்கெனவே சில வேலைகளில் இருக்கிறேன்’ என்று காயப்படுத்தாமல் சொல்லாம். எல்லா வேலையும் உங்கள் பொறுப்பு. நீங்கள் எல்லா வேலைகளையும் செய்வீர்கள் என்ற கருத்தை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

என்னால் செய்ய இயலாது, எனக்கு வேறு பொறுப்புகள் இருக்கிறது, இது என் வேலை இல்லை, எனக்கு ஓய்வு தேவை’ என்பதை நீங்கள் சொல்லாதவரை மற்றவர்கள் அதை உணரமாட்டார்கள்.எனவே சொல்லிப் புரியவைக்க ஆரம்பிப்பது நல்லது.

Women (Representational Image)

ஒருவருக்கு ‘நோ’ சொல்லும் போது உங்களுக்கு வரும் குற்ற உணர்வு பழக்கப்பட்ட மனநிலையின் வெளிப்பாடே… அதை நீங்கள்தான் மாற்ற முயற்சி செய்யவேண்டும். உங்களுக்கு, உங்கள் உடலுக்கு, உங்கள் மனநிலைக்கு ஓய்வு என்பது அவசியம். ஓய்வே இல்லாமல் வேலை செய்தால் நீங்கள் சோர்வடைவது, எரிச்சல் அடைவது, இயல்பாக நடக்கும். நீங்கள் எல்லாருக்கும் ‘yes’ சொல்லும் போது நீங்கள் உங்களுக்கே ‘no’ சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.

இங்கு உங்களை எல்லாரும் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதில்லை… நீங்கள் எப்போதும் கிடைக்கிறீர்கள் என்பதுதான் பிரச்னை. எனவே மற்றவர்களைப் பற்றி யோசிக்காமல் ‘நோ’ சொல்ல ஆரம்பியுங்கள் சூழல் மாறும்.

No சொல்ல ஆரம்பிப்பது உறவுகளை உடைக்காது… உங்களைக் காப்பாற்றும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *