அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் கடந்த மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஈரானுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தது. அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதேசமயம் ஈரான் விதிக்கும் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
இதனால் இதில் இரு தரப்பினர் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இரு நாடுகளிடையே பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவ தளபதி முனிர் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெஹ்ரான் சென்று இருக்கிறார்.
மற்றொருபுறம் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா தயாராகி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லையெனில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது.
எனினும், புதிய தாக்குதல்கள் குறித்த இறுதி முடிவு எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்று சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானுக்கு எதிராகப் புதிய தாக்குதல்களைத் தொடுப்பது குறித்து நிர்வாகம் பரிசீலித்து வந்த நிலையில், அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மகன் திருமணத்திற்கு செல்லாத ட்ரம்ப்
அதோடு அதிபர் டொனால்டு ட்ரம்ப் வார விடுமுறையை கழிக்க நியூஜெர்சி செல்வது வழக்கம். ஆனால் இந்த வாரம் அதனை ரத்து செய்துவிட்டார். அதோடு இன்று ட்ரம்ப் மகனுக்கு திருமணம் நடக்கிறது. அந்த திருமணத்திற்கு கூட செல்லாமல் அதிகாரிகளுடன் ஏற்பாடுகள் குறித்து ட்ரம்ப் ஆலோசித்து வருகிறார்.
மகன் திருமணத்திற்கு செல்லாமல் இருப்பது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில், “‘இந்த முக்கியமான காலகட்டத்தில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையிலேயே நான் தங்கியிருப்பது முக்கியம் என்று நான் கருதுகிறேன். டான் மற்றும் பெட்டினாவுக்கு வாழ்த்துகள்! என்று அவர் ‘Truth Social’-இல் பதிவிட்டிருந்தார்.