
சமூக ஊடக உலகில், தேசிய அளவில் தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை முதலில் உணர்ந்து கொண்டது பாஜகதான். தேர்தல் வியூகங்களை வகுப்பது என்றால் வேறொன்றுமில்லை. கொள்கைகளை, தலைவர்களது பேச்சுகளை மக்களது மத்தியில் கொண்டு செல்லும் அதேவேளையில், எதிர்க்கட்சியினர் செய்யும் சிறு தவறுக்காக காத்திருந்து அதையும் மக்களது கவனத்திற்கு கொண்டு செல்வது. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் ஏற்ப, வேட்பாளர்களது தேர்வு முதல் அத்தொகுதியில் இருக்கும் பிரச்னைகளைக் கண்டறிந்து அவரது தேர்தல் அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் தயாரிப்பது வரை தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிறுவனங்களே மேற்கொள்ளும்.
இந்த நிலையில் தான் ஐபேக் உடன் சேர்ந்து திமுகவிற்காக பணிப்புரிந்த ஆதவ் அர்ஜூனா, திமுக தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து விலகிய, தனது தொழில்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். அப்போதுதான் one mind India எனும் நிறுவனம் VOICE OF COMMONS FOUNDATION எனும் தேர்தல் வியூக நிறுவனமாக உருமாற்றம் கொண்டது. இதனைத் தொடர்ந்து விசிகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் மூலம் விசிகவை டிஜிட்டல் மயமாக்கினார்.
பிறகு திமுக கூட்டணியில் விசிக நீடித்ததோடு, திருமாவளவனுக்கு கூட்டணியில் முக்கியத்துவம் தரப்படவில்லை என்று விசிகவில் இருந்து விலகினார் ஆதவ். தொடர்ந்து, விஜய்யின் தவெகவில் ஐக்கியமான அவர், தனது வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் மூலம், தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
குறிப்பாக, டிஜிட்டலில் விஜய்க்கு ஆதரவாகவும் திமுகவிற்கு எதிரான கருத்துக்களை பகிர ஒரு குழுவையே உருவாக்கினார். அவர்களின் பணி சிறப்பாக இருந்த காரணத்தினால், திமுக தேர்தலில் தோல்வியை தழுவியது என்றே சொல்லவேண்டும். காரணம், விஜய்க்கான மவுஸ் ஒருபக்கம் இருந்தாலும், டிஜிட்டல் மீடியாவில் இவர்கள் பார்த்த வேலைகளை திமுகவினாலே சமாளிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இப்படி, தேர்தலுக்காக இரவு பகல் உழைத்த வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் ஊழியர்களை தேர்தல் முடிந்தவுடன் கழட்டிவிட்டுள்ளார் ஆதவ் அர்ஜுனா என்ற தகவல் வெளியாகியுள்ளது. வாய்ஸ் ஆஃப் காமன்ஸில் மீடியா டீமில் வேலைப்பார்த்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீரென வேலையைவிட்டு தூக்கியெறியப்பட்டுள்ளதாக்க் கூறப்படுகிறது.
மேலும், தற்போது வேலையில் உள்ள ஊழியர்களுக்கு எப்போது தங்களையும் தூக்கிவிடுவார்கள் என்ற பீதியிலேயே இருப்பதாகவும், இதுதொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வாயை திறக்காமல் இருப்பதாகவும் முன்னாள் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவையும் ரீச் செய்ய முடியாமல், மேலிட ஊழியர்களும் சரியாக பதிலளிக்காமல் தட்டிக் கழிக்கின்றனர் என்றும், இதனால் கடைநிலைய ஊழியர்கள் தான் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.