கத்தார் ஜெர்சியில் களம்காணும் நம் மண்ணின் மைந்தன்! | Tahsin Mohammed Jamshid Qatar Football World Cup

Spread the love

கண்ணூரிலிருந்து கத்தார் வரை…

தஹ்சினின் குடும்ப வேர்கள் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளன. தோஹாவில் பிறந்து வளர்ந்த இவரது தந்தை ஜம்ஷித், கண்ணூர் மாவட்டத்தின் தலசேரி்யைச் சேர்ந்தவர். தாய் ஷைமா, வளப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர். 1996-ல் கத்தாருக்குக் குடிபெயர்ந்த இந்த குடும்பத்தில் பிறந்த தஹ்சின், அந்நாட்டின் கால்பந்து கலாச்சாரத்திலேயே வளர்ந்தார். கோழிக்கோடு பல்கலைக்கழகத்திற்காக கால்பந்து விளையாடிய திறமையான வீரரான அவரது தந்தை, மகனின் பயணத்திற்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்துள்ளார். கத்தாரின் குடியுரிமை பெற்ற தஹ்சின், அந்நாட்டின் பல நட்சத்திர வீரர்களை உருவாக்கிய புகழ்பெற்ற அஸ்பயர் அகாடமியில் பயிற்சி பெற்று தன்னை மெருகேற்றிக்கொண்டார்.

வரலாறு படைக்கும் தருணம்!

கத்தாரின் U17 மற்றும் U19 அணிகளில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடிய தஹ்சின், U17 அணிக்காக கோலும் அடித்துள்ளார். பின்னர், கத்தாரின் டாப் டிவிஷன் லீக்கான “கத்தார் ஸ்டார்ஸ் லீக்’-ல் அல் துஹைல் அணிக்காக விளையாடிய முதல் இந்திய வம்சாவளி வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார். வேகம், அபாரமான டிரிப்ளிங் திறன் மற்றும் எதிரணி வீரர்களை எளிதில் கடந்து செல்லும் ஆற்றல் கொண்ட தஹ்சின், கத்தாரின் எதிர்கால நட்சத்திரங்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் கத்தார் சீனியர் அணிக்காக அறிமுகமானார். இந்தியாவிற்கு எதிரான போட்டிக்கான அணியிலும் அவர் பெயர் இடம்பெற்றிருந்தது. 19 வயதில் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிப்பதே ஒரு மகத்தான சாதனை. ஒருவேளை, அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடக்கும் இந்த உலகக்கோப்பையில் அவர் களமிறக்கப்பட்டால், ஃபிஃபா உலகக்கோப்பையில் விளையாடிய முதல் கேரள மற்றும் இந்திய வம்சாவளி வீரர் என்ற சரித்திர சாதனையை அவர் படைப்பார்.

அதே சமயம், ஆஸ்திரேலிய அணியில் கேரளாவின் அண்டை மாநிலமான தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட 25 வயதான நிஷான் வேலுப்பிள்ளையும் இடம்பெற்றுள்ளார். இருவரில் யார் முதலில் உலகக்கோப்பையில் அறிமுகமாவார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கத்தார் அணி, தொடரை நடத்தும் கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் போஸ்னியா போன்ற சவாலான அணிகள் உள்ள பிரிவில் உள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது எளிதல்ல என்றாலும், தஹ்சினின் தேர்வு கேரள கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையையும், பெருமையையும் அளித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *