“கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் முதல்வர் விஜய் என்ன சாதிக்கப் போகிறார்?” – அன்புமணி

Spread the love

தமிழ்நாட்டிற்கு 15 நாள்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவிற்கு உத்தரவிட்டுள்ளது. இது அடுத்த 15 நாள்களில் வெறும் 4.5 டி.எம்.சி நீரளவு மட்டுமே ஆகும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கர்நாடகா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரில் இது பத்தில் ஒரு பங்கு மட்டுமே. இருந்தபோதிலும், இந்த குறைந்தபட்ச நீரைக்கூட வழங்கக் கர்நாடகா தயாராக இல்லை.

இன்று காலை நிலவரப்படி, கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நான்கு அணைகளிலும் சேர்த்து மொத்தம் 67.078 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. மேலும், இந்த நான்கு நீர்த்தேக்கங்களுக்கும் வரும் மொத்த நீர்வரத்து வினாடிக்கு 25,644 கனஅடியாக உள்ளது. இந்த நீர்வரத்தில் ஆறில் ஒரு பங்கை மட்டுமே தமிழ்நாட்டிற்குத் திறந்து விடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைச் செயல்படுத்துவதால் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் குறையப் போவதில்லை. மாறாக, நாளொன்றுக்கு தோராயமாக 1.9 டி.எம்.சி நீர் அதிகரிப்பதன் மூலம், அடுத்த 15 நாள்களில் அணைகளின் மொத்த நீர் இருப்பு சுமார் 28 டி.எம்.சி உயரும். நிலைமை இப்படி இருக்கவும், தமிழ்நாட்டிற்கு உத்தரவிடப்பட்ட குறைந்த அளவிலான தண்ணீரைக்கூட திறந்து விடக் கர்நாடக அரசு முன்வரவில்லை.

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணையும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரங்களில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தக் கூடாது என்பதே தமிழ்நாட்டு மக்களின் நிலையாகும். முதலமைச்சர் விஜய் இந்த உணர்வுக்கு எதிராக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. எனவே, ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்வதாக அறிவித்துள்ள திட்டத்தை அவர் உடனடியாகக் கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *