
மாவட்ட பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய புகார் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்தன.
பிரச்சினை நீதிமன்றம் வரை சென்ற நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விரும்பத்தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், பாலியல் ரீதியாக அணுகியதாகவும், அவர் மீது மாவட்ட எஸ்பியிடம் கடந்த 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தார்.அந்தப் புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், ஆட்சியரின் உதவியாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.மேலும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.
இதனிடையே, ஆட்சியர் புகார் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான திருப்பூர் மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி எஸ்பி ஷானாஸிடம் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனையின்போது, நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் அடங்கிய கோப்புகளை விசாரணை அதிகாரியிடம் கள்ளக்குறிச்சி எஸ்பி வழங்கியதாகக் கூறப்படுகிறது.தொடர்ந்து, கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங், ஆட்சியரிடமும் விசாரணை நடத்தினார்.
இதனிடையே, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி, கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் இல்லத்துக்குச் சென்று சம்மன் வழங்கி, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணை அறிக்கைகள் ஒருபுறம் தயாராகி வரும் சூழலில், கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர்-2 சுவாதி அழகப்பனிடம் மாவட்ட ஆட்சியர் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
இதன்மூலம், இந்த வழக்கில் நீதித்துறை நடுவரும் ஒரு சாட்சியாக அமையக்கூடும் எனக் கருதப்படுகிறது.
இந்த வழக்கின் போக்கில், பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அருள் விக்னேஷ் சம்பவங்களைத் திரித்துப் பேசும் பட்சத்தில், நீதித்துறை நடுவரிடம் அளிக்கும் வாக்குமூலம் வழக்கின் முக்கிய சாட்சியமாக இருக்கும் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 22-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால், அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, கள்ளக்குறிச்சி பெண் அரசு அதிகாரியின் புகார் தொடர்பான விசாரணையை 60 நாள்களுக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க, தமிழக அரசு அமைத்துள்ள 4 பேர் கொண்ட உள் புகார்கள் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.POSH சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்தக் குழு, விசாரணையை 60 நாள்களுக்குள் முடிக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இப்பிரச்சினையை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மேலும் தீவிரமாக கையில் எடுத்துள்ளன.அதை எதிர்கொள்ள ஆளும் தரப்பு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பிரச்சினையின் தீவிரத்தைத் தவிர்க்க, அருள் விக்னேஷை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முன்னர் கைது செய்ய ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்த யூகங்களுக்கு இடையே, அருள் விக்னேஷ் இல்லம் அருகே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து பரபரப்பான சூழல் காணப்படுகிறது.