தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகிலுள்ள செபத்தையாபுரம், சோலைபுதூர் வேதமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசிபாண்டியன். இவரது மகன் முத்துராஜ். இவர் செபத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த சுடலைமணி என்பவரின் 17 வயது மகள் செபத்தையாபுரத்தில் பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். மாணவியுடன் முத்துராஜுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், மாணவியின் பள்ளிப்படிப்பு முடிந்து, திருமண வயதை எட்டிய பிறகு திருமணம் தொடர்பாக பேசிக்கொள்ளலாம் என முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அம்மாணவி வேறொரு நபருடன் செல்போனில் பேசுவந்துள்ளாராம். இதனால், முத்துராஜாவிடம் பேசுவதை சமீப காலமாக தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த மாணவியிடம், முத்துராஜ் நேரில் பேச பல முறை முயன்றும் அவர் பேசவில்லையாம். இதனால், சந்தேகமடைந்த முத்துராஜ், அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.