கூலக்கடை பஜார்: `தொழில்நுட்பத்தோட எங்க பாரம்பர்யத்தால போட்டிப்போட முடியல' – கலங்கும் பொற்கொல்லர்கள்!

Spread the love

நெல்லை கூலக்கடை பஜார்

திருமணம், காது குத்து, குடும்பச் சடங்குகள் என எதற்கு நகை வாங்க வேண்டும் என்றாலும், நெல்லை மக்களின் முதல் தேர்வு ‘கூலக்கடை பஜார்’ தான். குறிப்பாக, இங்குள்ள பாரம்பர்யமிக்க பொற்கொல்லர்களிடம் நகையைச் செய்யக் கொடுப்பவர்கள் ஏராளம். பண்டிகைக் காலங்களில் அலைமோதும் கூட்டமே இதற்குச் சாட்சி.

ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம், கவர்ச்சிகரமான விளம்பரங்கள், எலைட் ஷாப்பிங் அனுபவம் ஆகியவற்றிற்கு மத்தியில் பாரம்பர்ய நகைக்கடைகள் தங்கள் தொழிலில் தள்ளாட்டத்தைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றன. நகைத்தொழில் நவீனமயமாகியிருக்கும் இந்தக் காலத்தில் கூலக்கடை பஜார் பொற்கொல்லர்களும் நகை வியாபாரிகளும் எப்படி தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றனர் என்பதை பகிர்ந்து கொள்கிறார், திருநெல்வேலி நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் அழகிய சுந்தரம்.

நெல்லை கூலக்கடை பஜார்

லாபம் பார்ப்பது குதிரைக்கொம்பு…

“இந்த ஒரே வீதியில் மட்டுமே சுமார் 300 நகைக்கடைகள் உள்ளன. பாரம்பர்யப் பழக்கத்தின் காரணமாகவே மக்கள் தங்களுக்குப் பிடித்த கடைகளை நாடி வருகின்றனர். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு கடைகளாகத் தொடங்கி, இன்று தொழில் தெரிந்த பலரும் தனித்தனியாகக் கடைகளை அமைத்துள்ளனர். இதனுடன் கார்ப்பரேட் நிறுவனங்களின் போட்டியும் சேர்ந்து கொண்டதால், இக்காலத்தில் லாபம் பார்ப்பதே கடினமாகிவிட்டது.

கடுமையான போட்டி…

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வீதிதான் நெல்லையின் நகைக் கூட்டத்தின் மையப்புள்ளி. ஆனால், இப்போது சுவாமி சன்னதி வீதியிலும் நகைக்கடைகள் பெருகிவிட்டன. அதுமட்டுமன்றி, வண்ணார்பேட்டைப் பகுதி அடுத்த வணிக மையமாக மாறி வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையிலேயே பெரும் போட்டி நிலவும் போது, எங்களைப் போன்ற சிறு வணிகர்கள் வாடிக்கையாளர்களுடன் வைத்துள்ள தனிப்பட்ட நன்மதிப்பை நம்பியே பிழைப்பு நடத்தி வருகிறோம்.

அழகிய சுந்தரம்

குறையும் நகை விற்பனை…

முன்பு திருமணங்களுக்கு 50 பவுன் நகை வாங்கியவர்கள், இன்று பொருளாதாரச் சூழலால் 30 பவுனாகக் குறைத்துக் கொண்டுவிட்டனர். நடுத்தரக் குடும்பத்தினர் காதணி விழா போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே நகை வாங்குகின்றனர். பணக்காரர்கள் பாதுகாப்பான முதலீடாகவும், அவசரத்திற்குப் பணமாக மாற்றிக் கொள்ளவுமே தங்கம் வாங்குகின்றனர். தற்போது வங்கிகளில் எளிதாகக் கடன் கிடைப்பதால், நகைகளை விற்பனை செய்வதும் கணிசமாகக் குறைந்துள்ளது.

தொழிலை கைவிட்ட பொற்கொல்லர்கள்…

கார்ப்பரேட் நிறுவனங்களின் விளம்பர உத்திகளோடு எங்களால் போட்டியிட முடியவில்லை. சோமசுந்தரம் செட்டியார், மணிமாளிகை, சிவகாமி, காசி ஜுவல்லர்ஸ் போன்ற ஒரு சில பாரம்பர்யக் கடைகளைத் தவிர, மற்றவர்களால் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடைகளைக் கொண்டு செல்ல முடியவில்லை. குறிப்பாக, கொரோனாவிற்குப் பிறகு பலரும் இந்தத் தொழிலை விட்டே விலகிவிட்டனர். கோவை, திருச்சி, தூத்துக்குடி என எங்குமே இல்லாத தட்டச்சுத் திறன் கொண்ட பாரம்பர்யப் பொற்கொல்லர்கள் நெல்லையில் உள்ளனர். ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. கோவை, சென்னை, மதுரை மற்றும் கேரளாவின் திருச்சூர் போன்ற இடங்களிலிருந்து நகைகள் இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாகக் கோயம்புத்தூரில் இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் நவீன வடிவமைப்புகள் சந்தையை ஆக்கிரமித்துள்ளன. தொழில்நுட்ப ரீதியாக நாம் இன்னும் ‘அப்டேட்’ ஆகாததே இதற்குக் காரணம். தற்போது தமிழகத்திலேயே அதிக தங்கம் உற்பத்தி செய்யும் இடமாக கோவை மாறிவிட்டது. நாம் பின்தங்கியதால் ஏற்றுமதி வாய்ப்புகளையும் இழந்துவிட்டோம்.

நெல்லை கூலக்கடை பஜார்

இயந்திரமயமாகும் எதிர்காலம்…

துல்லியமான எடையில் சங்கிலி செய்வது, கல் பதிப்பது, எனாமல் (Enamel) வேலைப்பாடு என ஒவ்வொரு பிரிவிலும் தனித்திறன் வாய்ந்த கலைஞர்கள் நெல்லையில் இருந்தனர். முற்காலத்தில் நெல்லை மக்கள் நகையின் தரத்தையும், உறுதியையும் மட்டுமே பார்த்தனர். ஆனால், இன்றைய தலைமுறையினர் புதிய மாடல் டிசைன்களை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்ற இயந்திரத் தொழில்நுட்பம் தற்போது நம்மிடம் இல்லை. எனினும், வரும் காலங்களில் அந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன; பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார் விரிவாக.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *