“ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட்’ (HCL) நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதன் இணை நிறுவனர் அஜய் சௌத்ரி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் நிறுவனத்தின் ஆரம்பக்கால நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாங்கள் எங்கள் வேலையைத் துறந்தோம். சிவ் நாடார், அர்ஜுன் மல்ஹோத்ரா, யோகேஷ் வைத்யா, சுபாஷ் அரோரா, டி.எஸ்.பூரி மற்றும் நான் (அஜய் சௌத்ரி) என மொத்தம் ஆறு பேர் இருந்தோம்.
அது 1976-ஆம் ஆண்டு. இந்தியாவில் ‘ஸ்டார்ட்அப்’ என்ற கலாசாரம் அப்போது பரவலாக இல்லை. வென்ச்சர் கேபிட்டல் நிதியுதவி என்ற ஒன்று அப்போது இருக்கவே இல்லை. வெறும் யோசனையை மட்டும் வைத்துக்கொண்டு நின்ற ஆறு இளைஞர்களுக்குக் கடன் கொடுக்க வங்கிகளும் தயாராக இல்லை. கணினிகளைப் பற்றிச் சொல்வதானால்… பெரும்பாலான மக்கள் அதைக் கேள்விப்பட்டுக்கூட இருக்கவில்லை.
ஆனால், மைக்ரோப்ராசஸர் தொழில்நுட்பம் உலகையே மாற்றப்போகிறது என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். அதனால், அந்தத் துணிச்சலான முடிவை எடுத்தோம். எங்கள் ஆறு பேரிடமிருந்த சேமிப்பை ஒன்றுதிரட்டி, கடன் வாங்கி, ஒருவரது காரையும் விற்று, எப்படியோ ₹1.87 லட்சத்தைச் சேர்த்தோம். டெல்லியின் ‘கோல்ஃப் லிங்க்ஸ்’ பகுதியில் இருந்த ஒரு சிறிய மாடி அறையே எங்கள் முதல் அலுவலகமானது. எங்களுக்கு ‘மைக்ரோகாம்ப்’ என்று பெயரிட்டுக் கொண்டோம். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு கணினியை உருவாக்க நாங்கள் விரும்பினோம். ஆனால், ஒரே ஒரு பெரிய பிரச்னை இருந்தது.
எங்களிடம் கணினி தயாரிப்பதற்கான உரிமம் இல்லை. அதுவே எங்களை ‘யுபி எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தை நோக்கி அழைத்துச் சென்றது. அவர்களிடம் உரிமம் இருந்தது; எங்களிடம் தொழில்நுட்பம் இருந்தது. அந்தத் தொழில் கூட்டாண்மைதான் ‘ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட்’ (HCL) பிறக்கக் காரணமானது. ஆனால், இதன் பிறகு நடந்ததுதான் அனைத்தையும் விட மிகத் துணிச்சலான விஷயம். வடிவமைப்பு நிலையிலேயே இருந்த, இன்னும் முழுமையாக உருவாகாத ஒரு கணினியை நாங்கள் விற்கத் தொடங்கினோம். எங்களிடம் ஒரு தகவலேடு மற்றும் கணினியின் மாதிரி வடிவம் மட்டுமே இருந்தன. அவ்வளவுதான்!