மேற்கு கொலம்பியாவில் நேற்று இரவு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளதாக “அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொலம்பியாவின் தலைநகர் போகொட்டாவிற்கு மேற்கே 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாக்கோ பிராந்தியத்தில், சுமார் 4,800 மக்கள் வாழும் சான் ஜோஸ் டெல் பால்மர் சமூகப் பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.
பூமிக்கு அடியில் 107 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடான ஈக்வடாரிலும் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். இதனால் பலர் காயமடைந்ததுடன், பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஆறு விமான நிலையங்கள் சேதமடைந்திருக்கின்றன. குறிப்பாக மேற்கு கொலம்பியாவில் உள்ள பெரிரா, மணிசாலேஸ், குவிப்டோ, அர்மீனியா, கார்டாகோ மற்றும் புவெனவென்ச்சுரா ஆகிய நகரங்களுக்குச் சேவை வழங்கும் விமான நிலையங்களே பாதிக்கப்பட்டுள்ளன.
அதனால் அவற்றின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் ஏரோநாட்டிக்ஸ் முகமை தெரிவித்துள்ளது.