சென்னையை அடுத்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க திமுக சார்பில் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியைச் சந்தித்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, புதிய தவெக அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.
ஏற்கனவே இத்திட்டத்திற்காக 50 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், தற்போது அத்திட்டம் ரத்து செய்யப்பட்டது என்று கூறுவது திமுகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.இத்திட்டத்தை கைவிட்டால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனாலும் அங்கு வாழ்கின்ற விவசாயிகளை கருத்தில் கொண்டு தான் இத்திட்டத்தை ரத்து செய்கிறோம் என்று தவெக அரசு கூறியது. மேலும் இந்த இடத்திற்கு பதிலாக வேறு இடத்தை தேர்வு அதில் விமான நிலையம் கொண்டு வருவோம் என்று தெரிவித்தது.
சட்டசபையில் இது குறித்து பெரும் விவாதமாக மாறி தங்கம் தென்னரசுக்கும்,அமைச்சர் நிர்மல் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இத்திட்டத்தை ரத்து செய்ததால் திமுகவினர் ஏன் இப்படி கோபம் அடைகிறார்கள் எந்த “ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காகத்தான் திமுக எம்எல்ஏ-க்கள் கதறுகிறார்கள்” என்று அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்தார். உடனே இதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு நீங்கள் எதற்காக இத்திட்டத்தை ரத்து செய்தீர்கள் “எந்த லாட்டரி மருமகனுக்காக” என்று கூறியதற்கு இரு தரப்பினர் மத்தியிலும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு சட்டசபை சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் ஜி ஸ்கொயர் நிறுவனம் பரந்தூரில் அதிக அளவிலான இடங்களை வாங்கி வைத்திருப்பதாகவும், அதன் காரணமாகவே திமுகவினர் இத்திட்டத்திற்கு அதிகம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தவெகவினர் சமூக வலைத்தளங்களில் ஆதாரம் இல்லாமல் தகவல்களைப் பரப்பினர். இதையடுத்து, பரந்தூரில் தங்களுக்கு எந்த இடமும் கிடையாது என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கை, கடந்த இரண்டு தினங்களாக மீண்டும் வைரலானது.
எந்த தொடர்பும் கிடையாது
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனர் பாலா ராமஜெயம், தனது நிறுவனத்திற்கும் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவனர் பாலா ராமஜெயம் கூறியதாவது:
“சட்டசபையில் ஆதாரம் இன்றி ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து பேசியவர்கள் மீது ஆதாரம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆதாரம் வழங்கப்படாத பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பிறகு 25 நாட்களுக்குள் கட்டுமானம் மற்றும் இதர அனுமதிகள் வழங்கப்படுவதை வரவேற்கிறேன்.
இதுவரை ரியல் எஸ்டேட் துறையில் ரொக்கமாக இல்லாமல் பணப்பரிவர்த்தனை அடிப்படையில் பிசினஸ் செய்யக்கூடிய ஒரே நிறுவனம் ஜி ஸ்கொயர். எங்கள் நிறுவனத்தை முன்னாள் ஆட்சியாளர்களோடு தொடர்புபடுத்துவது ஏற்புடையதல்ல.
பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படவிருந்த இடத்தைச் சுற்றி எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ எந்த இடமும் இல்லை. ஓபனாக சவால் விடுக்கிறேன். எப்போதெல்லாம் என் நிறுவனத்தை சபரீசனோடு இணைத்துப் பேசுகிறார்களோ, அப்போதெல்லாம் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. நான் பெற்ற பிள்ளைகளுக்கு யாரோ ஒருவர் உறவு கொண்டாடுவதைப் போல் இருந்தது.
நான் ஓபன் சவால் விடுக்கிறேன். என் கம்பெனியோட மதிப்பு ரூ.10,000 கோடி. கடன் ரூ.2,300 கோடி. எல்லா வருடமும் புக் ஃபைல் பண்ணியிருக்கிறேன். என்னிடம் சோதனை நடத்தாத ஏஜென்சிகளே இல்லை. நீங்கள் எல்லோரும் சேர்ந்து எனக்கும் சபரீசனுக்கும் தொடர்பு இருக்கிறது என்று நிரூபித்துவிட்டால், 50 சதவீத பங்குகளை இலவசமாக எழுதி கொடுத்துவிட்டுப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.ஜி ஸ்கொயர் நிறுவனர் பேசியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

