இருவரும் தைவான் முழுவதும் ரயிலில் பயணம் செய்து, தைவானிய பாரம்பர்ய உணவுகளை ருசிக்கின்றனர். இந்தப் பயணத்தின் போது இருவருக்கும் இடையே ஓர் ஆழமான, இனிமையும் கசப்பும் கலந்த காதல் மலர்கிறது. ஆனால், ஓர் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஜப்பானியப் பெண்ணுக்கும், அடிமைப்பட்டுக் கிடக்கும் உள்ளூர் தைவானியப் பெண்ணுக்கும் இடையிலான காதலில், அதிகாரம், மொழி எத்தகைய சிக்கல்களை உருவாக்குகிறது என்பதை மிக அழகாகவும், உணர்வுபூர்வமாகவும் இந்த நூல் விவரிக்கிறது.

இந்த நாவலின் முக்கிய கருப்பொருளான உணவு, பயணம் குறித்து ஆராய்ச்சி செய்ததைப் பற்றி ஆசிரியர் கூறுகையில், “இந்த நாவலுக்கான ஆராய்ச்சி என் வாழ்க்கையில் இரண்டு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. என் சேமிப்பு பணமெல்லாம் கரைந்து போனது, அதேசமயம் என் உடல் எடை பெருமளவு கூடியது!” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாவல் 2020-ம் ஆண்டில் தைவானின் மிக உயரிய இலக்கிய விருதான `கோல்டன் ட்ரைபாட்’ (Golden Tripod) விருதையும், 2024-ம் ஆண்டில் அமெரிக்காவின் தேசிய புத்தக விருதையும் வென்றுள்ளது.