லண்டனில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆற்றிய உரையில், சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், சாவர்கரின் கொள்ளுபேரனின் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
ராகுல் காந்தி, லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சாவர்க்கர் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்தார்.
அந்த உரையில் ராகுல் காந்தி, “சாவர்க்கர் தனது புத்தகத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவரும் அவருடைய 5-6 நண்பர்களும் சேர்ந்து ஒருமுறை ஒரு முஸ்லிம் மனிதரை அடித்ததாகவும், அது தங்களுக்கு மகிழ்ச்சி அளித்ததாகவும் எழுதியிருக்கிறார்” என்று பேசினார்.
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு சாவர்க்கரின் பேரன் சத்யகி சாவர்க்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
“சாவர்க்கர் தனது புத்தகத்தில் எங்குமே அப்படி எழுதவில்லை. சாவர்க்கரின் பிம்பத்தைச் சிதைப்பதற்காகவும், இந்துத்துவ இயக்கத்தைப் பற்றித் தவறான கருத்துகளைப் பரப்புவதற்காகவும் ராகுல் காந்தி திட்டமிட்டுப் பொய் பேசுகிறார்” என்று கூறி, புனே நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
புனேவில் உள்ள எம்.பி/எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் குறுக்கு விசாரணையின் போது, சாவர்க்கரின் பேரன் சத்யகி சாவர்க்கர் தனது கருத்தை முன் வைத்திருக்கிறார்.
சத்யகி சாவர்கரி, “சாவர்க்கர் சிறையில் இருந்தபோது, ஆங்கிலேய அரசுக்கு ஐந்து முறை கருணை மனுக்களைச் சமர்ப்பித்தார் என்பது உண்மைதான். ஆனால், இதை நாம் அந்தக் காலக்கட்டத்தின் பின்னணியில் இருந்து பார்க்க வேண்டும்.
சாவர்க்கர் மட்டுமன்றி அங்கிருந்த பல அரசியல் கைதிகளும் இதே போன்ற மனுக்களை அன்றைய ஆங்கிலேய அரசுக்கு அனுப்புவதை ஒரு நடைமுறையாகவே வைத்திருந்தார்கள்.
அதேபோல், அவர் பசுவைக் கடவுளாகக் கருதவில்லை. பசு என்பது ஒரு ‘பயனுள்ள விலங்கு’ என்கிற பகுத்தறிவுப் பார்வையைத்தான் அவர் கொண்டிருந்தார். சாவர்க்கரின் முழுமையான எழுத்துக்களை வாசிக்காதவர்களே இத்தகைய விவாதங்களைக் கிளப்புகிறார்கள்.

மேலும், இரண்டாம் உலகப் போரின்போது இந்திய இளைஞர்களை ஆங்கிலேய ராணுவத்தில் சேருமாறு சாவர்க்கர் வேண்டுகோள் விடுத்தார் என்பதும் உண்மை. ஆனால், அது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதற்காக அல்ல.
மாறாக, இந்திய இளைஞர்கள் ராணுவப் பயிற்சி பெற்று, நவீன ஆயுதங்களைக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் அத்தகைய முடிவை எடுத்தார்.
இதன் மூலம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நமக்கென ஒரு பலமான ராணுவத்தை உருவாக்க முடியும் என்று அவர் நம்பினார்” என்று சத்யகி சாவர்க்கர் தெரிவித்தார்.
இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூன் 1-ஆம் தேதி அன்று மீண்டும் தொடர உள்ளது.